கோலாலம்பூர் – அண்மையில் யூடிஎம் எனப்படும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட பாடங்களில் இந்து, சீக்கிய சமயங்கள் குறித்த தவறான, எதிர்மறையான சித்தரிப்புகள் குறித்து தாங்கள் அணுக்கமாகவும், அக்கறையுடனும் கண்காணித்து வருவதாக கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் “நாங்கள் யூடிஎம் பல்கலைக் கழக பாட உரையின் போது, இந்து மதம், மற்றும் சீக்கிய மதம் குறித்து மோசமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து வெளிவந்த பத்திரிக்கைச் செய்திகளை கண்காணித்து வருகிறோம். இந்து மதமும், சீக்கிய மதமும் இந்தியாவில் பிறந்த இரண்டு மாபெரும் மதங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த இரு மதங்கள் குறித்தும் தவறான, எதிர்மறையான சித்தரிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து நாங்கள் அக்கறையோடு, கண்காணித்து வருகின்றோம்” என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
“நாட்டின் சுகாதார அமைச்சர், கல்வித் துணையமைச்சர், ஆகியோரும் மற்றவர்களும் இந்த சம்பவம் குறித்து தங்களின் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதே வேளையில் யூடிஎம் பல்கலைக்கழகம் சார்பில் ஆழ்ந்த வருத்தமும், தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதையும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழா வண்ணம் இருக்க அவர்கள் உறுதியளித்திருப்பதையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் இந்தியத் தூதரகம் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.