Home Featured நாடு அரசியல் பார்வை: இடைத் தேர்தல்கள் – மகாதீர்  பிரச்சாரம் எடுபடுமா – எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள்...

அரசியல் பார்வை: இடைத் தேர்தல்கள் – மகாதீர்  பிரச்சாரம் எடுபடுமா – எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தே.மு. வாக்குகளை மிஞ்சுமா – பாஸ் கட்சியை விட அமானா கூடுதல் வாக்குகள் பெறுமா?  

830
0
SHARE
Ad

(சனிக்கிழமை நடைபெறும் இரட்டை நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் பார்வையாளர்களால் முக்கியமாக எதிர்பார்க்கப்படும் 3 கேள்விகளுக்கான விடைகள் என்ன – ஏன் அவை மலேசிய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது கண்ணோட்டத்தில் பதிவு செய்கின்றார்)

இன்று சனிக்கிழமை (ஜூன் 18) நடைபெறும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் பல முனைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

Ahmad-Termizi-amanah-Kuala Kangsarகோலகங்சார் அமானா-பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் அகமட் தெர்மிசி….

#TamilSchoolmychoice

14வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள்தான் இறுதியானவை. இனி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது மரணமடைந்தாலோ, அல்லது ஏதாவது காரணங்களுக்காக அவர்களின் பதவி பறிக்கப்பட்டாலோ, அதற்காக அவர்களின் தொகுதிகளில் பொதுத் தேர்தலுக்கு முன்பாக இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதில்லை என்கிறது மலேசிய சட்டம்.

எனவே, தேர்தல் வாயிலாக மக்கள் செல்வாக்கை நிர்ணயிக்கும் வாய்ப்பு இன்னொரு முறை அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை.

இன்றைய அரசியல் சூழலில், இரட்டை நாடாளுமன்றத் தேர்தல்களில் யார் வெல்லப் போகின்றார்கள் என்பதை விட அதிமுக்கியமான மூன்று கேள்விகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இயல்பாகவே எழுந்துள்ளது.

  • முன்னாள் பிரதமர் துன் மகாதீர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மேற்கொண்டிருக்கும் பிரச்சாரம் சாதகமான பலன்களைத் தந்து எதிர்க்கட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுமா?
  • பாஸ்-அமானா இணைந்து பெறப்போகும் மொத்த எதிர்க்கட்சி வாக்குகள் தேசிய முன்னணி பெறப்போகும் வாக்குகளை மிஞ்சுமா?
  • பக்காத்தான் ஹாராப்பான் எதிர்க்கட்சி கூட்டணியின் அங்கமான பார்ட்டி அமானா நெகாரா (அமானா) பாஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெறுமா?

இவைதான் அந்த 3 கேள்விகள்!

கேள்வி # 1 : மகாதீர் பிரச்சாரம் எடுபடுமா?

Mahathir-Sungei Besar campaignஅரசியல் ரீதியாக எதையுமே வித்தியாசமாகச் செய்பவர் மகாதீர். எதிர்க்கட்சிகளோடு இணைந்து, நஜிப் பதவி விலகலுக்குப் போராடியவர், பொதுமக்கள் பிரகடனத்தை முழங்கியவர், இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக, அதுவும் ஜசெக மேடையிலேயே ஏறி நின்று பேசும் அளவுக்கு தனது போராட்டத்தை யாரும் எதிர்பாராத ஓர் எல்லையை மீறி கொண்டு சென்றிருக்கின்றார்.

கடந்த சனிக்கிழமையன்று (11 ஜூன் 2016) சுங்கை பெசாரில் பிரச்சாரத்திற்காக களமிறங்கிய அவரது அரசியல் நடவடிக்கைகளும் வித்தியாசமான அணுகுமுறையோடுதான் இருந்தன.

முதலாவதாக, அவர் எதிர்க்கட்சிக் கூட்டணி வேட்பாளர் அசார் அப்துல் ஷூக்கோரை பகிரங்கமாக ஆதரித்தாலும், அதற்காக அவர் ஏறிய பிரச்சார மேடை, நஜிப்பின் 1 எம்டிபி-நன்கொடை குறித்த விவகாரங்களுக்கு எதிராக ஜசெகவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்தான்!

இங்குதான், அவர் வித்தியாசப்படுகின்றார்.

“நான் எதிர்ப்பது நஜிப் செய்த காரியங்களையும், அவரது தலைமைத்துவத்தையும்தான். மாறாக அம்னோவையும் தேசிய முன்னணியையும் அல்ல” என்பது போன்ற ஒரு மெல்லிய, சாதுரியமான அரசியல் கோட்டைக் கிழித்துக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றார் மகாதீர்.

அம்னோவினர், மாற்றத்தைக் கொண்டுவராத பட்சத்தில் நான் நஜிப்பை வீழ்த்த எதிர்க்கட்சிகளோடு கைகோர்க்கின்றேன் என்ற ரீதியில் இருக்கின்றது அவரது பிரச்சாரம். தேசிய முன்னணி தோல்வியுற்றால் அதன்மூலம், நஜிப்பை பதவி விலகச் செய்யும் நெருக்குதல்கள் நீடிக்கும் என்பது அவரது வாதம்.

எனவேதான், நேரடியாக ஜசெக ஏற்பாடு செய்த அரசியல் கூட்டம் எதிலும் பேசாமல், 1எம்டிபி தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு பெற்றிருக்கின்றார் மகாதீர். கோலகங்சாரிலும் அடுத்த நாள் ஜூன் 12ஆம் தேதி இதே பாணியிலான ஒரு கூட்டம் ஜசெகவால் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலும் பங்கு பெற்றிருக்கின்றார் மகாதீர்.

அமானா வேட்பாளரின் தந்தையுடன் சந்திப்பு

Azhar-Abdul-Shukor-Sungei Besar -amanah candஅமானா-பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் அசார் அப்துல் ஷூக்கோர்…

பிரச்சார மேடையில் ஏறுவதற்கு முன்னால் மகாதீர் சென்று பார்த்தது, எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் வேட்பாளராகப் போட்டியிடும் அசார் அப்துல் ஷூக்கோரின் தந்தையை. தற்போது நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் அசாரின் தந்தை டத்தோ அப்துல் ஷூக்கோர் சிராஜ், சுங்கை பெசார் அம்னோவின் முக்கியமான முன்னாள் தலைவர்களில் ஒருவர்.

தனது மகன் அசார் அமானா வேட்பாளராகப் போட்டியில் இறங்கியிருப்பது அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை எனத் தகவல்கள் பரவத் தொடங்கிய நிலையில், “அசாருக்குப் பக்கபலமாக நானே இருக்கிறேன்” எனக் காட்டுவது போல, மகாதீர் நேரே அசாரின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை டத்தோ அப்துல் ஷூக்கோரைச் சந்தித்திருக்கின்றார்.

தன்னைப் பார்க்க தனது வீட்டிற்கே வந்த மகாதீரைப் பார்த்து அப்துல் ஷூக்கோர் அழுதிருக்கிறார் என்கின்றன பத்திரிக்கைத் தகவல்கள்.

கோலகங்சாரிலும், சுங்கை பெசாரிலும் மகாதீர் மாறி, மாறி பிரச்சாரம் செய்து வருவதன் விளைவாக, நடுநிலை வாக்காளர்கள் பலர் எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடும் என்பது ஒரு சில அரசியல் கணிப்பாளர்களின் கணக்கு. அம்னோவில் இருக்கும் அதிருப்தியாளர்கள், நஜிப் எதிர்ப்பாளர்கள், மகாதீரின் பழைய ஆதரவாளர்கள் என பல வாக்காளர்கள் மகாதீரின் பிரச்சாரத்தால் தேசிய முன்னணிக்கு எதிராகத் திசை மாறும் அபாயமும் இருக்கின்றது.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது என்னவென்றால், மகாதீர் இதுபோன்ற பிரச்சாரங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் தொடர்ந்தால், அதன் மூலம், அம்னோ வட்டாரங்களில் ஊடுருவினால், அதன் காரணமாக ஏற்படக் கூடிய அதிர்வுகளை நஜிப் தலைமைத்துவம் தாங்குமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம்.

இந்த சிந்தனைகளோடு, நாம் அடுத்து செல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா என்ற இரண்டாவது கேள்விக்கு!

கேள்வி # 2 : எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா?

அமானா, பாஸ் இரண்டும் இணைந்து பெறப் போகும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் தேசிய முன்னணி பெறும் வாக்குகளை மிஞ்சி விட்டால், அதன் மூலம் மகாதீரின் பிரச்சாரம் எடுபட்டிருக்கின்றது என்பது தெளிவாகும் என்பதுடன் பலரின் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் மேலும் ஒரு கேள்விக்கான விடையும் கிடைத்து விடும்.

நஜிப் தலைமைத்துவத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை அதனால்தான் மொத்த எதிர்ப்பு வாக்குகள் தேசிய முன்னணியை விட அதிகமான இருக்கின்றன என்பதுதான் அந்த விடையும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் செய்தியும்.

najibஇவ்வாறு நடந்தால் – அதன் விளைவால் தேசிய முன்னணி வெற்றி பெற்றாலும்கூட – நஜிப் அதைப் பெரிதாகக் கொண்டாட முடியாது. மாறாக, எதிர்க்கட்சிகள் முன்பு போல் ஒன்றிணைந்தால், தேசிய முன்னணி தோற்றுவிடும் என்ற நிதர்சன உண்மை வெளிச்சத்துக்கு வரும், எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியைவிடக் கூடுதலாகிப் போனால்!

இதைத் தொடர்ந்து நஜிப் மீதான பதவி விலகல் நெருக்குதல்கள் அம்னோவில் அதிகரிக்கக்கூடும். அவர் அடுத்த பொதுத்தேர்தல் வரை தொடர்ந்தால், நிலைமை மேலும் மோசமாகும் என்ற அச்சம் அம்னோவில் பரவக் கூடும். மகாதீரின் பிரச்சாரங்களும் மேலும் தீவிரமடையவும், வலுவடையவும், விரிவடையவும் கூடும்.

அதைவிட முக்கியமாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் தங்களின் நிலைப்பாட்டை-தங்களுக்கிடையிலுள்ள ஒற்றுமையை பரிசீலிக்கக் கூடும். மீண்டும் இணைவதற்கான சாத்தியக் கூறுகளை அவை ஆராய முற்படலாம்.

இந்த இரட்டை இடைத் தேர்தல்கள் அடுத்து தரப்போகும் ஒரு விடையும் மலேசிய அரசியலின் எதிர்காலத்தைப் புரட்டிப் போடும் வண்ணம் அமைந்திருக்கும்.

அமானா கட்சி பாஸ் கட்சியை விட கூடுதலாக வாக்குகளை வாங்க முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி!

கேள்வி # 3 : அமானா, பாஸ் கட்சியைவிடக் கூடுதல் வாக்குகள் பெற்றால்…

Parti Amanah Negara - logoபார்ட்டி அமானா நெகாரா, பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களைக் கொண்ட ஒரு கட்சி. இந்த இரட்டைத் தேர்தல்கள்தான் அதன் முதல் தேர்தல் களம்.

எனவே, பாஸ் கட்சிக்கு இணையான – வலுவான அரசியல் மையமாக அமானா உருவாக முடியுமா? பாஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெற முடியுமா? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளும், அதைத் தொடர்ந்து எழப்போகும் அரசியல் வியூகங்களும் இன்றைய இரட்டைத் தேர்தல் முடிவுகளில் அடங்கியிருக்கின்றன.

அமானா, மட்டும் பாஸ் கட்சியை விட கூடுதலாக வாக்குகள் பெறும் சாதனையைப் புரிந்து விட்டால், அதன்பின்னர் பாஸ் கட்சி தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையோரங்களில் தனது பலத்தை இழக்கக் கூடும். பாஸ் ஆதரவாளர்கள் அமானா பக்கம் சாயத் தொடங்குவார்கள்.

pas-umno-logo-தீவிரமான இஸ்லாமியப் பற்றாளர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவான வாக்காளர்களை மட்டுமே ஈர்க்கக் கூடிய கட்சியாக பாஸ் சிறுத்து, தனித்து விடப்படும்.

பக்காத்தான் ஹாராப்பானில் அமானா கட்சியின் பங்களிப்பும், ஈடுபாடும், செயல்பாடுகளும் மேலும் அதிகரித்து பாஸ் கட்சியை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கே முழுக்குப் போடும் நிலைமை வரலாம்.

இதன் மூலம் மற்றொரு அதிரடி அரசியல் மாற்றமும் பாஸ் கட்சியிலேயே நிகழக் கூடிய சாத்தியமும் இருக்கின்றது.

ஹாடி அவாங்கை பாஸ் தலைவர் பதவியிலிருந்து அகற்றும் நெருக்குதல் முயற்சிகள்தான் அவை.

நேற்று முளைத்த அமானா, பாரம்பரிய பாஸ் கட்சியை விட கூடுதல் வாக்குகள் பெறுவது எதனால் என பாஸ் கட்சியினர் ஆராயத் தொடங்கும்போது அவர்கள் முன்னால் விசுவரூபம் எடுத்து நிற்கப்போகும் விடை அதன் தலைமைத்துவ போக்கு என்பதாகத்தான் இருக்கும்.

அம்னோவுடன் நெருக்கம், ஹூடுட் சட்டம், பக்காத்தான் ராயாட்டிலிருந்து விலகியது என பாஸ் தலைவர் ஹாடி அவாங் மேற்கொண்ட தலைமைத்துவ முடிவுகள்தான் அந்தக் கட்சியின் மோசமான சரிவுக்கும், அமானா அதனை முந்திக் கொண்டதற்கும் காரணம் என்பது தெளிவாகும்போது, பாஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழலாம்.

இவ்வாறாக, பல அரசியல் முக்கியத்துவங்களோடு, மலேசியாவின் எதிர்கால அரசியல் பாதையை – திசைகளை நிர்ணயிக்கப் போகின்றன -இன்றைய இரட்டைத் தேர்தல்களின் முடிவுகள்!

-இரா.முத்தரசன்

 

 

.