புதுடில்லி – இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்கின் ஆளுநரான (கவர்னர்) ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைவதை முன்னிட்டு, அவர் மீண்டும் இரண்டாவது தவணைக்கு நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக தகவல் ஊடகங்களால் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், ராஜனின் பதவிக் காலம் இரண்டாவது தவணைக்கு நீட்டிக்கப்படாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ராஜன் மத்திய வங்கி ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் தான் பதவி விலகியதும், பல்கலைக் கழகம் அல்லது விரிவுரையாளர் போன்ற கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபடக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ரகுராம் ராஜன் செயல்படவில்லை என்பதால் அவர் பதவி நீக்கப்பட வேண்டும் என பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி அண்மையில் போர்க்கொடி தூக்கியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அளவில் மிகப் பெரிய பொருளாதார மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் ராஜன், அவராகவே முன்வந்து பதவி விலகியுள்ளாரா அல்லது அவரது பதவி நீட்டிப்பை நிதியமைச்சு அங்கீகரிக்கவில்லையா என்பதுதான் இப்போது புதுடில்லி வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சையாகும்.
ராஜன் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.