(தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்துக்கான பொருளாதார விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூற நியமித்த 5 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ரகுராம் ராஜன். ஐஎம்எஃப் (International Moneytary Fund -IMF) எனப்படும் அனைத்துலக நிதிக் கழகத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் என பல உயர் பதவிகளை வகித்திருப்பவர். அந்த சாதனைத் தமிழரின் பின்னணியை சில சுவைத் தகவல்களோடு விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்துக்கான பொருளாதார விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூற 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இந்திய மத்திய வங்கியின் அதாவது இந்திய ரிசர்வ் பேங்க்கின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் அந்தக் குழுவில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். தமிழரான இவர் உலக அளவில் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
நியமிக்கப்பட்டிருக்கும் இந்த 5 பேர்களில் ஊடகங்களில் அதிக அளவில் விவாதிக்கப்படுபவரும் ரகுராம் ராஜன்தான்!
சரி! யார் இந்த ரகுராம் ராஜன்?
அவரின் தகுதிகள், சாதனைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!
இந்தியப் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய தந்தை
1963-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் பிறந்தவர் ரகுராம். இவரின் தந்தை ஆர்.கோவிந்தராஜன் மத்திய புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர்.
அதன் காரணமாக வட இந்திய மாநிலங்களில் ரகுராமின் குடும்பம் பெரும்பாலும் வசிக்கும் நிலைமை ஏற்பட்டது.
போபாலில் பிறந்து டில்லியில் ரகுராம் கல்வியைத் தொடர்ந்ததற்கும் அதுதான் காரணம்.
பொருளாதார அறிஞராக இன்று பார்க்கப்படும் ரகுராமின் முதல் பட்டப் படிப்பு என்ஜினியரிங் அதாவது பொறியியல் துறை சார்ந்தது என்பது ஆச்சரியமான விஷயம்.
டில்லியில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலோஜியில் (Indian Institute of Technology Delhi) மின்சாரப் பொறியியல் துறையில் 1985-இல் பட்டம் பெற்றார் ரகுராம். அத்துடன் பல்கலைக் கழகத்தில் எல்லாத் துறைகளிலும் சிறந்த மாணவர் என்பதற்கான தங்கப் பதக்கத்தையும் வென்றார் ரகுராம்.
தொடர்ந்து 1987-ஆம் ஆண்டில், அகமதாபாத் நகரிலுள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மானேஜ்மெண்ட் (Indian Institute of Management) பல்கலைக் கழகத்தில் MBA எனப்படும் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் அதாவது மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றார் ரகுராம்.
அதைத் தொடர்ந்து டாட்டா குழுமத்தின் நிர்வாக சேவைகள் பிரிவில் இணைந்தார்.
சில மாதங்களிலேயே அங்கிருந்து விலகினார். தொடர்ந்து மேற்கல்வியைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார் ரகுராம்.
மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலோஜியில் (Massachusetts Institute of Technology) வங்கிகள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு முனைவர் பட்டப்படிப்பை அதாவது டாக்டரேட் பட்டப் படிப்பை முடித்தார் ரகுராம்.
பல்கலைக் கழக விரிவுரையாளர் – பேராசிரியர்
பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் 1995-இல் முழுநேரப் பேராசிரியரானார் ரகுராம்.
பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கிறார் ரகுராம். அவரின் கட்டுரைகளும், நூல்களும் பல பரிசுகளையும் வென்றிருக்கின்றன.
அதைத் தொடர்ந்து 40 வயதுக்கும் குறைவானவர்களில் சிறந்த நிதி நிர்வாக ஆராய்ச்சியாளர் என்ற கௌரவமும் அவருக்கு 2003-இல் அமெரிக்க நிதிக் கழகத்தால் அளிக்கப்பட்டது.
1997-இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து International Monetary fund என்ற அனைத்துலக நிதிக் கழகம் பல சீர்திருத்தங்களை அனைத்துலக அளவில் மேற்கொண்டது. அதற்காக அந்த அனைத்துலகக் கழகம் தனது தலைமை பொருளாதார நிபுணராக ரகுராமை நியமித்தது.
அந்தப் பொறுப்பில் அக்டோபர் 2003 முதற்கொண்டு டிசம்பர் 2006 வரை பணியாற்றினார் ரகுராம்.
அமெரிக்காவிலும் அனைத்துலக அளவிலும் பணியாற்றி புகழ்பெற்ற அவரை அடையாளங் கண்டு கொண்ட இந்திய அரசாங்கம் தாய் மண்ணுக்கு சேவையாற்ற அழைப்பு விடுத்தது.
2007-இல் இந்திய நிதித் துறையில் ஏற்படுத்த வேண்டிய அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் குழுவுக்கு தலைவரானார் ரகுராம்.
ரகுராம் ஆற்றலுக்கு வாய்ப்பளித்த மன்மோகன் சிங்
ரகுராமின் ஆற்றலைக் கண்டு கொண்ட அப்போதைய பிரதமரும், மற்றொரு பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் அவரைத் தனது பொருளாதார ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
2012-இல் இந்தியாவின் நிதி அமைச்சின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ரகுராம்.
இந்திய அரசாங்கம் மத்திய வங்கியின் அதாவது ரிசர்வ் பேங்க்கின் 23-வது ஆளுநராக 3 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு 2013 ஆகஸ்ட் மாதத்தில் அவரை நியமித்தது.
அந்தப் பதவியை ஏற்பதற்காக அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பணியிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டார் ரகுராம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற ரகுராம் அரசாங்கத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பதவி விலகிய போது அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் அரவிந்த் சுப்பிரமணியம் என்ற மற்றொரு பொருளாதார அறிஞர்.
ரகுராமிற்குப் பின்னர் இந்திய அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அந்த அரவிந்த் சுப்பிரமணியமும் ஸ்டாலின் நியமித்துள்ள தமிழ் நாட்டுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தில் ரகுராம்
ரகுராம் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவியில் இருந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமானத் தோல்விகளைச் சந்தித்தது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக நரேந்திர மோடி புதிய பிரதமரானார்.
அப்போது முதல், ரகுராம் ராஜனுக்கும் நரேந்திர மோடி அரசாங்கத்திற்கும் இடையில் நிதி நிர்வாகத்தைக் கையாள்வது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின.
2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இரண்டாவது தவணைக்குத் தொடரப் போவதில்லை என அறிவித்தார் ரகுராம்.
இந்திய அரசாங்கம் அவரை இரண்டாவது தவணைக்கு நீட்டிக்கவில்லை என்ற தகவல் அப்போது நிலவியது. இன்னொரு புறத்தில் சிகாகோ பல்கலைக் கழகம் அவருக்கு விடுமுறை வழங்கவில்லை என்றும் மீண்டும் பணிக்குத் திரும்ப அழைத்தது என்றும் கூறப்பட்டது.
காரணங்கள் எதுவாக இருந்தாலும், மதிப்புமிக்க ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகினார் ரகுராம்.
மீண்டும் சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியர் பணிக்குத் திரும்பினார் ரகுராம்.
அந்தப் பணியில் தொடர்ந்து கொண்டே அவ்வப்போது தனது பொருளாதாரக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
குறிப்பாக நரேந்திர மோடி அமுல்படுத்திய பண மதிப்பிழப்பு திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஆனால், முடிவெடுக்கும்படி தாங்கள் கேட்டுக் கொள்ளப்படவில்லை என்றும் ரகுராம் ஒருமுறை கருத்து தெரிவித்தார்.
மோடியின் பணமதிப்பு இழப்பு திட்டத்திற்கு எதிரான கருத்துகளை ரகுராம் பல முறை தெரிவித்திருக்கிறார்.
தமிழ் நாட்டுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் ரகுராமுடன் இடம் பெற்றிருக்கும் மற்ற நால்வரும்கூட சிறந்த பொருளாதார அறிஞர்கள். அவர்களில் எஸ்தர் டப்ளோ (Esther Dufflo) என்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி நோபல் பரிசை வென்றவர். இந்தியாவில் பொருளாதார ஆராய்ச்சிகளையும், ஏழ்மை ஒழிப்பு குறித்த ஆய்வுகளும் மேற்கொண்டவர்.
மேலும் அரவிந்த் சுப்பிரமணியம், ஜீன் டிரெஸ், எஸ்.நாராயணன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் அரவிந்த் சுப்பிரமணியம் இந்திய அரசாங்கத்திற்கான முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராவார்.
ஜீன் டிரெஸ் சமூக நலன்கள் மீதான பொருளாதார ஆராய்ச்சியாளர் ஆவார். எஸ்.நாராயணன் மத்திய அரசாங்கத்தின் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமாவார்.
ரகுராம் உள்ளிட்ட ஆற்றல்மிக்க, அனுபவம் வாய்ந்த பொருளாதார அறிஞர்களை தமிழ் நாடு அரசுக்கு ஆலோசனை கூற அழைத்திருப்பது குறித்து ஸ்டாலினுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதே வேளையில் இந்திய அரசாங்கத்திற்கு தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்பது போன்ற உயர்ந்த பதவிகளை வகித்திருந்தாலும், கௌரவம் பார்க்காமல் ஒரு மாநில அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஐவரில் ஒருவராக இடம் பெற முன்வந்திருக்கும் ரகுராமின் தன்னடக்கமும் பண்பும் பலரால் பாராட்டப் பெறுகிறது.
தமிழன் என்ற உணர்வோடு, தனது தாய் மண்ணான தமிழகத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற தன்னலம் கருதாத உயர்ந்த பண்பை ரகுராம் கொண்டிருக்கிறார் என்ற பாராட்டுகளையும் அவர் பெற்று வருகிறார்.