நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகளை மீறியதற்காக நேற்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட அனுவார் மூசா, தன்னைப் போன்றே அம்னோ தேசியத்தலைவர் சாஹிட் ஹாமிடி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் உணவருந்தினார் என்று குற்றம் சாட்டி அதற்கான புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்களில் சாஹிட் ஹாமிடி, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பிகேஆர் கட்சியின் சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற ஜோஹாரி அப்துல் ஆகியோருடன் நெருக்கமாக அமர்ந்து சாஹிட் ஒரே தட்டில் உணவருந்துகிறார்.
“ஒரே தட்டில் அமர்ந்து உணவருந்துவது சுவையானது. அதுவும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும்போது ஓர் உணவகத்தில் அமர்ந்து உண்பதுவும் சுவையானது” என்ற பொருளில் அனுவார் மூசா பதிவிட்டிருக்கிறார்.
இன்னொரு புகைப்படத்தில் சாஹிட் தனது உரைகள் அடங்கிய நூல் ஒன்றை சைபுடின் நசுத்தியோனுக்கு வழங்குகிறார்.
இது குறித்துக் கருத்துரைத்த சைபுடின் நசுத்தியோன் “இந்தக் குற்றச்சாட்டுகளை அனுவார் மூசாவே கூறியிருப்பதால் அவர் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் எந்த தேதியில் நடந்தது, எந்த உணவகத்தில் நடந்தது என்பது குறித்தும் கூறவேண்டும். அதன்பிறகு நான் எனது பதிலைக் கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றன என்பதை விட சாஹிட் இரகசியமாக பிகேஆர் தரப்புகளை அரசியல் ரீதியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறார் என்பதையே அனுவார் மூசாவின் பதிவேற்றங்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன.