கோலாலம்பூர் – கடந்த ஜூன் 10-ம் தேதி, பெண் காவல்துறை அதிகாரி ஒருவருடன் தங்கும் விடுதி ஒன்றில் காணப்பட்ட மை வாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், தன் மீது தவறான கண்ணோட்டம் நிலவி வருவது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நேற்று பண்டார் ஸ்ரீ ஜெம்புல் காவல்நிலையத்தில் புகார் அளித்த சஞ்சீவன், “நான் ஜூன் 20-ம் தேதி @mamifoo என்ற டுவிட்டர் பதிவைக் கண்டேன். அதில் நான் காவல்துறை அதிகாரியோடு நெருக்கமான நிலையில் பிடிபட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த டுவிட்டர் பதிவு முற்றிலும் பொய்யானது என்றும், நான் அது கூறுவது போல் எந்த ஒரு குற்றத்தின் பேரிலும் பிடிபடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி பொய்யாகக் கூறும் அந்த டுவிட்டர் பதிவுக்குச் சொந்தக்காரரை காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய பெயரையும், குடும்பத்தினரின் பெயரையும் களங்கப்படுத்தும் நோக்கில் அந்த நபர் இக்குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றார் என நம்புகின்றேன். அதனால் தான் இந்தப் புகாரை அளிக்கின்றேன்” என்றும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.