Home Featured வணிகம் ரகுராம் ராஜன்: சில சுவையான தகவல்கள்!

ரகுராம் ராஜன்: சில சுவையான தகவல்கள்!

717
0
SHARE
Ad

Raghuram_Rajan--ex-rbi governorபுதுடில்லி – அகில இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் அனைவராலும்  தற்போது ஏதாவது ஒரு காரணத்துக்காக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் ரகுராம் ராஜன்! இந்திய மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) ஆளுநரான இவர், இரண்டாவது தவணைக்கான பதவி நீட்டிப்புக்கு இணங்கவில்லை என்பதுதான் – அதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதுதான் – எழுந்துள்ள சர்ச்சைகளுக்குக் காரணம்.

தமிழரான ரகுராம் ராஜன் யார்? அவரது பின்னணி என்ன? சில சுவையான தகவல்களின் தொகுப்பு இது:-

  • களையான முகம்! கவர்ச்சியான தோற்றம்! நடுத்தர வயதுடைய இந்தி நடிகருக்குரிய முகவெட்டு! தொப்பையில்லாத கட்டுமஸ்தான உடலமைப்பு இதுதான் ரகுராம் ராஜன்.
  • ஆனால், அவரது பின்னணியோ அவர் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதை. இந்திய மத்திய வங்கியின் 23வது ஆளுநர் இவர்.raghuram-rajan-RBI LOGO
  • 1963ஆம் ஆண்டில் பிப்ரவரி 3ஆம் தேதி வட இந்தியாவில் போபாலில் பிறந்தவர் ராஜன். இவரது தந்தை கோவிந்தராஜன் இந்திய உளவுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியதன் காரணமாக, பல மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் மாற்றலாகிச் சென்றவர். அதன் காரணமாக ராஜனும் பலவிதமான பின்னணிகளைக் கொண்ட சூழலில் வளர்ந்தார். அடிக்கடி மாற்றலாகிச் செல்வதால், தனது தந்தை வெளியுறவு அமைச்சில் பணிபுரிவதாகவே நீண்ட காலம் நம்பி வந்தாராம் ராஜன்.
  • இளவயதில் வெளிநாடுகளில் பயின்ற ராஜன் டெல்லி ஐஐடியில் (இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) மின்சாரப் பொறியியல் (எலெக்ட்ரிகல் என்ஜினியரிங்) துறையில் பட்டம் பெற்றார்.
  • பின்னர் அகமதாபாத் இந்திய நிர்வாகக் கல்விக் கழகத்தில் (ஐஐஎம்) வணிக நிர்வாகத்துறையில் முதுகலை படித்தார்.
  • பின்னர் அமெரிக்கா சென்று புகழ்பெற்ற மசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலோஜி பல்கலைக் கழகத்தில் 1991இல் முனைவர் பட்டம் பெற்றார். அங்கே படித்துக் கொண்டிருந்த ராதிகா என்பவரைக் காதலித்துத் திருமணமும் புரிந்து கொண்டார்.
  • ராஜன் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு ஆண்கள், ஒரு பெண்.
  • 1991இல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தவர் பின்னர் 2003 வரை அங்கு பணியாற்றி நிதித்துறை பேராசிரியராக உயர்ந்தார்.Raghuram-Rajan-
  • 2003 முதல் 2006 வரை அனைத்துலக நாணய மையத்தில் (ஐஎம்எஃப்) தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணியாற்றினார். மிக இள வயதில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் இவர்தான்.
  • 2003இல் 40க்கும் குறைவான வயதுடையவர்களில் உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்ற கௌரவத்துடன் கூடிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  • இவர் எழுதிய நூல் ஒன்றுக்கு, 2010இல் அந்த ஆண்டிற்கான சிறந்த வணிக நூல் என்ற விருது வழங்கப்பட்டது.
  • அமெரிக்க குடியுரிமையையும் (கிரீன் கார்ட்) கொண்டிருப்பவர் ரகுராம் ராஜன்.
  • 2012இல் இந்தியாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட ராஜன், பின்னர் 2013இல் மத்திய  வங்கியின் ஆளுநராக (கவர்னராக) நியமிக்கப்பட்டார்.
  • 2016இல் உலகப் புகழ் பெற்ற டைம் ஆங்கிலப் பத்திரிக்கை, உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 நபர்களில் ஒருவராக ராஜனைத் தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
  • ரகுராம் ராஜன், பாஜகவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குத் தடைக் கல்லாக இருக்கிறார், அவர் மாற்றப்பட வேண்டும் என முதலில் கொளுத்திப் போட்டவர், சுப்பிரமணிய சுவாமி. பின்னர் அதுவே, விவாதமாக மாறி, இன்று இரண்டாவது தவணை வேண்டாம் என ராஜன் கூறும் அளவுக்கு சர்ச்சை வளர்ந்து விட்டது.
  • ராஜனின் நகைச்சுவை பிரசித்தி பெற்றது. கவர்னர் பதவி நீட்டிக்கப்படுமா என பத்திரிக்கைகள் உச்சகட்டத்தில் ஆரூடங்கள் எழுதிக் கொண்டிருந்த தருணத்தில் அவர் கூறினார்: “எனது மறு நியமனம் குறித்து பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி அதனால் அவர்கள் அடைந்து வரும் மகிழ்ச்சியை கொல்லும் கொடூரமான செயலை நான் செய்ய விரும்பவில்லை”
  • ஒரு முறை ஒரு சிக்கலான பொருளாதார தத்துவத்தை விளக்க, அதனுடன் தோசை சுடுவது குறித்து ஒப்பிட்டுப் பேசினார்.
  • கவர்னர் பதவிக்குப் பின்னர் தற்போதைக்கு பேராசிரியர் தொழிலுக்குத் திரும்பப் போவதாகக் கூறியுள்ள ராஜன், இந்திய நாட்டின் சேவைக்காக எப்போது அழைத்தாலும் திரும்ப வரத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
  • ராஜனை நியமித்தது காங்கிரஸ் கட்சி என்பதும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் அவர் என்பதும்தான், பாஜக அவரை மாற்ற நினைப்பதற்கான காரணங்கள் என்கின்றன புதுடில்லி அரசியல் வட்டாரங்கள்!
  •  அடுத்து ராஜன் எந்தப் பதவியில் அமர்ந்தாலும், உலக அளவில் அவரது கருத்துகளும், அவரது ஆலோசனைகளும் தொடர்ந்து மதிப்புடன் பார்க்கப்பட்டு வரும் என்பதில் ஐயமில்லை.

-செல்லியல் தொகுப்பு

#TamilSchoolmychoice