லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த 2003 -ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீட்டில் நடந்த காவல்துறை சோதனையில் தொடர்புடைய அறிக்கை ஒன்று தற்போது இணைதளம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கை, மைக்கேல் ஜாக்சனுக்கு பாலியல் விவகாரங்கள் மற்றும் சிறுவர்களிடத்தில் இருந்த ஈர்ப்பு குறித்து தெளிவாகக் காட்டுவதாகக் கூறப்படுகின்றது.
‘ரேடார் ஆன்லைன்’ என்ற இணையதளம் ஒன்றில் தற்போது வெளியாகியுள்ள இந்தப் புதிய அறிக்கையில், கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம், மைக்கேல் ஜாக்சனின் கலிபோர்னியா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு புத்தகங்கள், வார இதழ்கள், ஆவணங்கள் ஆகிய தகவல்கள் அடங்கியுள்ளன.
அந்த வகைப் புத்தகங்கள் சிறார்களைப் பாலியல் உறவுக்கு உட்படுத்த நினைப்பவர்களின் மனநிலையை சீர்படுத்த பயன்படுத்தப்படுபவை என்றும், என்றாலும் அது போன்ற புத்தகங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை இல்லை என்றும் அந்த காவல்துறை அறிக்கை கூறுகின்றது.
கடந்த 2005-ம் ஆண்டு, மைக்கேல் ஜாக்சனுக்கு எதிரான சிறார் பாலியல் பலாத்கார வழக்கில், நடந்த விசாரணையின் போது, அந்த அறிக்கை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அறிக்கை தற்போது எப்படியே வெளியே கசிந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2005-ம் ஆண்டு 14 வார விசாரணைகளுக்குப் பின்னர், சிறார் பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து மைக்கேல் ஜாக்சன் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.