நியூயார்க் – பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் மறைந்த மைக்கேல் ஜாக்சன், ‘பில்லி ஜீன்’ உட்பட பல பாடல்களைத் திருடி தான் உருவாக்கியதாக புகழ்பெற்ற இசைத் தயாரிப்பாளர் குயின்சி ஜோன்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
மைக்கேல் ஜாக்சனின் பல பாடல்களைத் தயாரித்த குயின்சி ஜோன்ஸ், அண்மைய பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்திருப்பது ஹாலிவுட் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
“நான் இதை பொதுமக்களிடம் கொண்டு வருவதற்கு வெறுக்கிறேன். ஆனால் மைக்கேல் நிறைய திருடியிருக்கிறார். அவர் நிறைய பாடல்களைத் திருடியிருக்கிறார்” என கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க் வார இதழுக்கு அளித்த பேட்டியில் குயின்சி ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
“குறிப்புகள் பொய் சொல்லாது. அதனை செய்வதில் மிகவும் சாமர்த்தியசாலியாக இருந்தார்” என 84 வயதான குயின்ஸ் ஜோன்ஸ் கூறியிருக்கிறார்.
குறிப்பாக, ஜோன்ஸ் தயாரிப்பில் உருவான ‘திரில்லர்’-ல் இடம்பெற்றிருக்கும் சிறப்பு “பில்லி ஜீன்” பாடல், டிஸ்கோ குயின் டோனா சம்மரின் “ஸ்டேட் ஆஃப் இண்டிபெண்டன்ஸ்” உடன் ஒத்துப்போவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“ஸ்டேட் ஆஃப் இண்டிபெண்டன்ஸ்” பாடலையும் ஜோன்ஸ் தான் தயாரித்து கடந்த 1982-ம் ஆண்டில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.