புதுடெல்லி – இந்தியாவிற்கும் உலகநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், தான் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் பல்வேறு உலகநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, மலேசியா, சிங்கப்பூர் என 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள மோடி, அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் பல நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது சுற்றுப்பயணத்தைப் பாதுகாப்பான வகையில் மாற்ற, அவருக்கென்று 2,100 கோடி மதிப்பில் பிரத்தியேக விமானம் தயாரிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக, உலகத் தலைவர்கள் பலர் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777 – 300 ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர்இந்தியா ஒன் எனப் பெயரிடப்படவுள்ள அவ்விமானத்தில், ஏவுகணை முறியடிப்பு வசதி , நவீன தகவல் தொடர்பு வசதிகள் பொருத்தப்படவுள்ளன.
குறிப்பாக எதிரிகளால் அவ்விமானத்தின் ரேடார் தொடர்பைக் கண்டறிய முடியாது என்று கூறப்படுகின்றது.
அதோடு, 2 ஆயிரம் பேருக்கான உணவை சேமித்து வைக்கும் வசதி, மருத்துவ வசதிகள், அறுவைச் சிகிச்சை மையம், தொலைக்காட்சி வசதிகள், யோகா பயிற்சிக்கென தனி இடம் என அவ்விமானத்தில் சகல வசதிகளும் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.