Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மெட்ரோ – வித்தியாசமான களத்தில், விறுவிறுப்பான படம்!

திரைவிமர்சனம்: மெட்ரோ – வித்தியாசமான களத்தில், விறுவிறுப்பான படம்!

672
0
SHARE
Ad

metro-poster-2கோலாலம்பூர் – பத்திரிக்கைகளில் இத்திரைப்படத்தின் கதைக்கரு குறித்து படித்த போதே, அதன் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. காரணம், இன்றைய சூழலில் இந்தியாவில் சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சினையாக ‘நகை பறிப்பு’ இருந்து வருகின்றது.

ஆனால், இச்சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள், இழக்கும் பொருட்கள், நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருந்தாலும் கூட, இக்குற்றங்கள் செய்பவர்களின் பொதுவான நோக்கம் என்னவோ பெரும்பாலும் பெண்களைக் குறி வைப்பது தான்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டால், இங்கு பெரிய பெரிய தங்கச் சங்கிலிகள் அணிந்து சாலையில் நடக்கும் பெண்களைப் பார்ப்பது அரிது. ஆனாலும், அவர்களிடம் பறிப்பதற்குக் கைப்பையோ, செல்போனோ இருக்கத் தான் செய்கின்றது. திருடர்கள் ஏன் அதே நோக்கத்தோடு ஆண்களை நெருங்குவதில்லை? என்ற கேள்வி எழலாம்.

#TamilSchoolmychoice

அதைத் தான் இப்படத்தில் காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு காட்சியில்,

ஹீரோ: “ஏண்டா எப்பவும் பொண்ணுங்களையே குறி வைக்கிறீங்க?”

பளார்!

திருடன்: “ஆஆ… அடிக்காதீங்க.. சொல்லிடுறேன்.. அவங்க தான் அதிகம் பயப்படுவாங்க. பின்னாலயே தொரத்திட்டு ஓடி வரமாட்டாங்க”

இப்படியாகப் படம் முழுவதும், ஆங்காங்கே ஒரு குற்றச்செயலைக் காட்டும் போது, பாதிக்கப்படும் பெண்களின் அச்சம், தனிமை மற்றும் கவனக்குறைவை தெளிவாகக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன். என்றாலும், அது போன்ற காரணங்கள் எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது.

நடிப்பு

metro-14நடிகர் ஷிரிஸ் மற்றும் செண்ட்ராயன் இருவரும் தான் படத்தில் முதலில் முக்கியக் கதாப்பாத்திரங்கள் போல் தெரிகின்றார்கள். ஷிரிஸ் வரும் காட்சிகளின் போது அவர் தான் கதாநாயகன் என்று எண்ணும் அளவிற்கு தொடக்கக் காட்சிகள் அமைகின்றன. அதற்கு ஏற்ப அவரும் கதாநாயகனுக்கே உரிய தோற்றத்துடனும், எதார்த்தமான நடிப்புடனும் நம்மை ஈர்க்கிறார்.

திடீரென ஒரு பிளாஷ்பேக் காட்சியில் ஷிரிசுக்கு தம்பியாக வருகின்றார் சத்யா என்ற நடிகர். சுமார் மூஞ்சியோடு தெரியும் அவரது அறிமுகக் காட்சியைப் பார்க்கும் போது, “நல்லாத்தானே படம் போயிட்டு இருக்கு, அதுக்குள்ள ஏன் இந்த தம்பி கதாப்பாத்திரத்தை திணிக்கிறாங்க.. வேற யாராச்சும் தெரிஞ்ச முகமா போட்டிருக்கக் கூடாதா?” என்று நாம் அலுத்துக் கொண்டிருக்கும் போதே அந்த நடிகர் அப்படியே வேறு மாதிரியாக விஸ்வரூபம் எடுக்கிறார். அதன் பிறகு ஷிரிசை மறந்தே விடுகின்றோம். அந்த அளவிற்கு சத்யா தனது நடிப்பால் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கின்றார்.

இதனிடையே அவருக்குச் சரிக்குச் சமமாக பாபி சிம்ஹா ஒருபுறம் புத்தியுள்ள திருட்டுக் கும்பல் தலைவனாக பல ஸ்கெச்சுகள் போட்டு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

“திருடனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?”, “ஹிட்லர புடிக்குமா? காந்தியப் புடிக்குமா?”, “வேணும்னு சொல்றது கெத்து இல்ல.. வேணாம்னு சொல்றது தான் கெத்து” இப்படியாக பல பஞ்ச் வசனங்களைப் பேசிக் கொண்டு சிம்ஹா வரும் காட்சிகள் ரசனை.

அதிலும், திருடனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் வித்தியாசம் காட்ட நடித்துக் காட்டும் காட்சி மிகவும் சிறப்பு. ஜிகர்தண்டாவிற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு தீணி போடும் கதாப்பாத்திரம். கொஞ்சம் நேரம் வந்தாலும் தனித்துத் தெரிகின்றார்.

இவர்களோடு, ஷிரிசின் அப்பாக வரும் குணச்சித்திர நடிகர், அம்மாவாக வரும் நடிகை துளசி, சத்யாவின் கல்லூரி நண்பராக வரும் நடிகர் என பலர் படத்தில் நம்மை பெரிதும் ஈர்க்கின்றனர்.

மெய்சிலிரிக்க வைக்கும் காட்சிகள் Tamilcinemastills.com-metro-movie-stills-2படத்தில் நம்மை மெய்சிலிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் உள்ளன. ஒரு 6 பேர்.. பெரிய பெரிய பைக்குகளில் முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு ஒருவித அச்சமும், பதற்றமும் கலந்த திருட்டு முழியுடன் கிளம்பும் போது, நம்மையும் அறியாமல் இருக்கையின் விளிம்பிற்கு வந்து விடுகின்றோம்.

குறிப்பாக, நகை பறிக்கப்படும் போது பைக்கில் இருந்து குழந்தை தூக்கி வீசப்படும் ஒரு காட்சி அவ்வளவு தத்ரூபமாக வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் அக்காட்சியைப் பாதுகாப்பான முறையில் தான் படம் பிடித்திருப்பார்கள் என்றாலும், அக்காட்சியின் வீரியம் நம்மை பதை பதைக்க வைக்கின்றது.

metro-11இன்னொரு முக்கியமான விசயம், நகை பறிக்கப் போகும் போது எப்படிப்பட்ட பெண்களைக் குறி வைக்க வேண்டும் என்று பாபி சிம்ஹா விளக்கமளிப்பது படம் பார்க்கும் நமக்கு சுவாரசியமாக இருந்தாலும் கூட, பெண்களுக்கு அது சரியான விழிப்புணர்வுத் தகவல். கொண்டை போட்ட பெண்ணிடம் நகை பறிக்க ஏதுவாக இருக்கும், ஹீல்ஸ் அணிந்த பெண் தான் பின்னால் ஓடி வந்து துரத்த மாட்டாள் இப்படியாக திருடர்களின் பார்வையில் பல விசயங்களை வெளியே கொண்டு வந்திருப்பதில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சபாஷ் பெறுகின்றார்.

அதற்கு ஏற்ப காட்சிகளிலும், போன் பேசிக் கொண்டே வீதியில் தனியாக நடந்து செல்லும் பெண், காய்கறி வாங்க கழுத்தில் நகையோடு வரும் பெண், புதிதாக வாங்கிய வைர டாலர் சங்கிலியை பேஸ்புக்கில் போட்டு பெருமை பீத்திக் கொண்ட பெண் என பாதிக்கப்பட்டதாகக் காட்டும் பெண்களுக்குப் பின்னால் இருக்கும் கவனக்குறைவை எடுத்துச் சொல்லும் படியான காட்சிகளையும் வைத்திருப்பது சிறப்பு.

அதேநேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே, “நைட்டு நேரத்துல ஏன் தம்பி அவ்வளவு பெரிய செயினை போட்டுக்கிட்டு வெளியே வரணும்?” என்று கேள்வி கேட்பது எதார்த்தத்தின் உச்சம்.

திருடப்படும் நகைகள் எங்கு போய் சேர்கின்றன? திருடியவர்கள் எப்படி அதன் மூலம் பணம் பெறுகிறார்கள்? என்ற கேள்விகளுக்கும் படத்தில் விடை இருக்கிறது. ஆனால் தணிக்கை காரணமாக விளக்கமாக இல்லை.

திரைக்கதை 

Tamilcinemastills.com-metro-movie-stills-13திரைக்கதை அமைப்பைப் பொறுத்தவரையில், இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸ் கூட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆரம்ப சில காட்சிகளிலேயே பழிவாங்கல் என்பது தெரிந்து விடுகின்றது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் கணித்து விட முடிகின்றது. படத்தின் தொடக்கமும், கிளைமாக்சும் பார்த்துப் பழகிய காட்சிகள் என்பதால், படத்தின் சுவாரசியங்கள் அனைத்தும் அதற்கு இடைப்பட்ட அந்த நகைத் திருட்டுக் காட்சிகளில் தேங்கி விடுகின்றது.

திருட்டு எண்ணம் எங்கிருந்து தொடங்குகிறது? என்பதை சத்யாவின் பாதை மாறல் வழி சொன்னது இயல்பாக இருந்தது. ஆனால் ஒரு போலீஸ்காரரின் மகன், பாசமான தாய், தந்தைக்குப் பிறந்தவன், சமூகப் பொறுப்போடு, வீட்டுப் பொறுப்பையும் கொண்டிருக்கும் அண்ணனுக்குத் தம்பி, இப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வரும் ஒரு இளைஞன், ஒரு விலையுயர்ந்த பைக்கிற்காகவும், காதலியின் ஆசையை நிறைவேற்றவும், தடாலடியாக அப்படியே சமூகத்திற்கு எதிரான ஒரு பாதையில் மாறுவது சற்றே நெருடல். அதற்கு குடும்பச் சூழலில் ஒரு அழுத்தமான காரணம் சொல்லவில்லை. இதனால் படம் பார்ப்பவர்கள் தங்களை கதையுடன் ஒப்பிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகின்றது.

என்றாலும், அந்த முக்கியக் காட்சி ஓன்றில் சுபாஸ் சந்திர போஸ் படம், பெண்ணின் முடி அவிழ்வது, நகக் கீறல் என அடுத்தடுத்த காட்சிகளுக்கான விசயங்களை சிறு குறிப்புகளின் மூலம் காட்டி, ரசிகனை யோசிக்க வைப்பதில் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பெரிதும் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவு, இசை 

????????????????????????????????????

இப்படத்திற்கு இவை இரு கண்கள் போல் அமைந்துள்ளது. டாப் ஆங்கிலில் தொடக்கக் காட்சியிலேயே அடிவயிற்றைப் பிசைய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார். கட்டிடக் குவியல்களுக்கு நடுவே தெரியும் தார் சாலைகளும், நெரிசல் வாகனங்களும் ஒரு வித பதற்றமான மனநிலையை ஏற்படுத்துகின்றன.

காட்சி ஒன்றில் ரோட்டில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் திருடர்களைக் காட்டுவது, கழுகுப் பார்வையில் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தெரியும் தெரியும் வட்ட வடிவமான பகுதியின் வழியே கேமராக் கண்களை ஊடுருவியிருப்பது என பல மாயாஜாலங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்.எஸ்.உதயகுமார்.

அதேவேளையில், அக்காட்சிகளுக்கு ஜோகனின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்திருக்கின்றது. இருட்டில் நடக்கும் அந்தத் திருட்டு சம்பவங்களுக்கு பின்புலமாக வரும் இசை படபடப்பைக் கூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இரண்டே இரண்டு பாடல்கள் தான் படத்தில், இரண்டிலுமே வரிகளும், இசையும் மனதில் தங்கி விடுகின்றன.

ஆக, ‘மெட்ரோ’ – வித்தியாசமான களத்தில், விறுவிறுப்பான விழிப்புணர்வுப் படமாக இருக்கின்றது.

 
– ஃபீனிக்ஸ்தாசன்