இலண்டன் – கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம், பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள், பிரிட்டனில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்தனர்.
ஆனால், நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள், தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நிக்கோலாஸ் ஸ்டர்ஜன்
ஸ்காட்லாந்து நாட்டில் வாக்களித்த மொத்த வாக்காளர்களில் 62 சதவீதத்தினர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்க வேண்டும் என வாக்களித்தனர். இருப்பினும் ஒட்டு மொத்த பிரிட்டனில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 52 சதவீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்திருக்கின்றனர்.
இந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து தொடர்ந்து பிரிட்டனில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய, மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட நெருக்குதல்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி கட்சியின் தலைவியும், ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிய வேண்டும் என்றும் போராடி வருபவருமான நிக்கோலாஸ் ஸ்டர்ஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். நிக்கோலாஸ் ஸ்காட்லாந்துக்கான பிரிட்டிஷ் அமைச்சருமாவார்.
கடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்து நாட்டின் பெரும்பான்மை நாடாளுமன்ற இடங்களை நிக்கோலாஸ் தலைமையிலான ஸ்காட்டிஷ் நேஷனல் பார்ட்டி கட்சிதான் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.