Home Featured நாடு 2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் – வலிமை...

2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் – வலிமை பெறுகின்றது மஇகா!

681
0
SHARE
Ad

MIC Logo 440 x 215கோலாலம்பூர் – நேற்று பிரதமர் நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில், இந்திய சமுதாயத்தின் பரவலான எதிர்பார்ப்பான இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும்,

அடுத்தடுத்து மஇகாவுக்கு கிடைத்து வரும் புதிய கூடுதலான அரசாங்கப் பதவிகள், அங்கீகாரங்கள் மூலம், கட்சி முன்பைவிட வலிமையான நிலையை, கட்டங் கட்டமான எட்டி வருகிறது என சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது மஇகா சார்பாக, மூன்று துணை அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்பதால், அதன் காரணமாக சமுதாயத்தின் பிரச்சனைகளை இன்னும் தீவிரமான முறையில், தீர்க்கமான முறையில் அணுகித் தீர்வுகள் காண முடியும் என்பதில் ஐயமில்லை.

#TamilSchoolmychoice

அத்துடன், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மஇகாவுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக, நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியும் கட்சிக்குக் கிடைத்திருக்கின்றது.

தேவமணியின் நியமனம்

Devamanyகட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற தேவமணிக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதன் மூலம், கட்சியின் வலிமை தொடர்ந்து நிலை நாட்டப்பட்டிருக்கின்றது.

அத்துடன் மஇகாவுக்கு கூடுதலாக ஒரு செனட்டர் பதவியும் கிடைத்திருக்கின்றது. இது மஇகாவுக்கு ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவை பதவிதான் என்றாலும், பொருத்தமான நேரத்தில் வழங்கப்பட்டிருப்பதன் மூலம், மேலும் ஒரு துணையமைச்சர் பதவியும் மஇகாவுக்குக் கிடைத்திருக்கின்றது.

கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற தேவமணி, இனி துணையமைச்சர் பதவியின் துணை கொண்டு மேலும் தீவிரமான சமுதாய, கட்சிப் பணிகள் ஆற்ற முடியும்.

அத்துடன் கட்சியின் முதலாவது உதவித் தலைவராக இருக்கும் டத்தோ விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியும், மஇகாவுக்கு கிடைத்திருக்கும் முக்கியமான அங்கீகாரமாகும். காரணம், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மஇகா இந்த முக்கியமான அரசாங்கப் பதவியைப் பெற்றிருக்கின்றது.

எப்போது கிடைக்கும் இரண்டாவது அமைச்சர் பதவி?

இருப்பினும், இரண்டாவது அமைச்சர் பதவி என்பது இந்திய சமுதாயத்தின் எண்ண உணர்வுகளோடு காலங் காலமாகப் பின்னிப் பிணைந்த – இந்தியர்கள் தங்களின் கௌரவப் பிரச்சனையாகக் கருதும் – ஒரு விவகாரமாகும்.

Tunku and Sambanthanதுங்குவுடன் துன் சம்பந்தன்…

1957இல் நாடு சுதந்திரம் பெற்றபோது நமக்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் பின்னர், துன் சம்பந்தன் விலகலுக்குப் பின்னர், அந்த இரண்டாவது அமைச்சர் பதவி பறிபோனது. மாணிக்கவாசகம் மட்டுமே அமைச்சராக இருந்தார்.

இருப்பினும் அப்போதைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் போராட்டத்தால், 1976இல் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனுக்கு இரண்டாவது அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, குறுகிய காலத்தில் ஏற்பட்ட, அவரது அகால மரணத்தால், மீண்டும் இரண்டாவது அமைச்சர் பதவியை மஇகா இழக்கும் நிலைமை ஏற்பட்டது.

Samy-Velluபின்னர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் 32 ஆண்டுகால தலைமைத்துவத்தின் கீழ், பல கோரிக்கைகள், முறையீடுகள் முன்வைக்கப்பட்ட போதும், மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் பதவி வழங்கப்படவே இல்லை.

2011இல், அன்றைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு, அப்போதைய துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இருவருக்கும் முழு அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டு, மீண்டும் இந்திய சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர்கள் என்ற பொற்காலம் உருவானது. ஆனால், கட்சியில் ஏற்பட்ட சில குளறுபடிகளால், பழனிவேலு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட, மீண்டும் ஒரே அமைச்சர் என்ற நிலைமைக்கு மஇகா தற்போது தள்ளப்பட்டிருக்கின்றது.

மற்ற கட்சிகளின் நிலைமை என்ன?

இந்த நேரத்தில் மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் கிடைக்கவில்லை என நாம் நமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில், மற்ற கட்சிகளின் நிலைமை குறித்தும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

gerakan-logoமஇகாவை விட வலிமை வாய்ந்தது கெராக்கான். ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியையே கொண்டிருந்த பலம் கொண்ட கட்சி. ஆனால், அவர்களுக்கே ஒரே ஒரு அமைச்சுப் பொறுப்புதான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

சபா, சரவாக் மாநிலத்தில், மஇகாவை விட, வலிமை வாய்ந்த, வாக்கு வங்கியைக் கொண்ட, அரசியல் பலமும், முக்கியத்துவமும் கொண்ட சில கட்சிகள் கூட ஒரே ஒரு அமைச்சரையோ, அல்லது துணையமைச்சரையோ மட்டும்தான் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நேற்று நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில் சரவாக் மாநிலத்தின் சார்பாக அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ டக்ளஸ் உங்கா வகித்த அமைச்சர் பதவி மற்றொரு சரவாக்காரருக்கு வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கின்றது என சரவாக் துணை முதல்வர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் அறிவித்திருப்பதையும் –

இதனால், மற்ற கட்சியினரும் எவ்வளவு தூரம் அமைச்சரவை மாற்றம் என்று வரும்போது, அதிருப்தியில் இருக்கின்றார்கள் என்பதையும் –

இந்த நேரத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Dr-S-Subramaniamஇரண்டாவது அமைச்சர் பதவியைப் பெற்றுத் தராத காரணத்தால், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியத்தின், அரசியல் எதிர்ப்பாளர்கள், அவர் மீது கடுமையான குறை கூறல்களை முன் வைக்கின்றார்கள்.

ஆனால், சில வாரங்களுக்கு முன்னால், 23 ஆண்டுகளுக்கும் முன்பு மஇகாவுக்கு கிடைத்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை மீண்டும் மஇகாவுக்குப் போராடிப் பெற்றுத் தந்தபோது, இப்போது குறை கூறும் இவர்கள் அப்போது, இதே டாக்டர் சுப்ராவை யாரும் பாராட்டவில்லை.

சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற, கோலகங்சார், சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில், மஇகாவின் சிறப்பான உட்கட்டமைப்பைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 75 சதவீத இந்திய வாக்குகளை தேசிய முன்னணிக்கு ஆதரவாகக் கொண்டு வந்து சேர்த்தபோதும், சுப்ராவை யாரும் பாராட்டவில்லை.

இப்போதுகூட, நமக்குக் கிடைத்திருப்பது ஒரு புதிய கூடுதலான செனட்டர் பதவியும், கூடுதலான ஒரு துணையமைச்சர் பதவியும்தான். ஆனால், அதற்கான பாராட்டு மொழிகளை உரைக்காதவர்கள்,

இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காததை மட்டும் பெரிதுபடுத்தி எழுதுவதும், பேசுவதும், மஇகா தலைமைத்துவத்தை குறைகூற இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஓர் அரசியல் வியூகம் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

najib-எனினும், இரண்டாவது அமைச்சர் என்பது இந்திய சமுதாயத்தின் உரிமை என்பதிலும், அதற்காக மஇகாவும், அதன் தேசியத் தலைவர் யாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து போராடவேண்டும் என்பதிலும் யாருக்கும் எள்ளளவு கூட ஐயப்பாடு இருக்க முடியாது.

அதே வேளையில், அமைச்சர் நியமனங்கள் என்பது முழுக்க முழுக்க பிரதமரின் அதிகார வளையத்துக்கு உட்பட்டதே தவிர, கட்சித் தலைவரின் அதிகாரத்திற்கோ, விருப்பத்திற்கோ உட்பட்டதல்ல.

பல கட்சிகளை – பல இன மக்களை – வெவ்வேறு மாநிலங்களை – உள்ளடக்கிய தேசிய முன்னணி கூட்டணி அமைப்பில் யாருக்கு – எப்போது அமைச்சர் பதவி என்பது பிரதமரின் முடிவைப் பொறுத்தது என்பதால்,

இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காததற்கு ஒரேயடியாக, மஇகா தேசியத் தலைவரைச் சாடுவதும், குறை கூறுவதும், மலேசிய நடைமுறை அரசியல் அறிந்தவர்களுக்கு ஏற்புடையது அல்ல!

பொதுத் தேர்தல் அறிவிப்பாக இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்கலாம்

இரண்டாவது அமைச்சர் பதவி என்பது இந்திய சமுதாயத்தின் உள் உணர்விலும், அரசியல் எண்ணங்களிலும் ஆழப் பதிந்த ஒன்று என்பதைக் கண்டிப்பாக பிரதமர் நஜிப்பும் உணர்ந்திருப்பார். 2011இல் சுப்ரா-பழனிவேல் இருவரையும் முழு அமைச்சர்களாக நியமித்தபோது அந்த முடிவுக்குக் கிடைத்த வரவேற்பையும் அப்போதே அவர் அறிந்தவர்தான்!

எனவே, இன்னும் ஓராண்டில், 14வது பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பொதுத் தேர்தலுக்கு முன்பாக, மஇகாவுக்கு 2 அமைச்சர்கள் என்ற அறிவிப்பை வழங்கி,

அதன் மூலம் இன்னும் கூடுதலாக, இந்தியர் வாக்குகளை சரியான நேரத்தில் அள்ளலாம் என்பதும் நஜிப்பின் அரசியல் வியூகமாக இருக்கக் கூடும் என்கின்றன ஒரு சில அரசியல் வட்டாரங்கள்.

எது எப்படியிருப்பினும்,

நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியைப் பெற்றது,

தனது கட்சித் துணைத் தலைவர் தேவமணிக்கான செனட்டர் மற்றும் துணையமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தது,

கோலகங்சார், சுங்கை பெசார் இடைத் தேர்தல்களில் இந்திய வாக்குகளை அதிகம் கவர்ந்து இழுத்தது,

போன்ற அடுத்தடுத்த – அடுக்கடுக்கான – அரசியல் நடப்புகளால்,

மஇகாவுக்கு முன்பை விட வலிமை கூடியிருக்கின்றது என்பதிலும், மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் மூலம், 14வது பொதுத் தேர்தலை மேலும் கூடுதலான நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும், எதிர்கொள்ள அந்தக் கட்சியின் தலைமைத்துவம் ஆயத்தமான நிலையில், வலுவுடன் இருக்கின்றது என்பதிலும் ஐயமில்லை.

-இரா.முத்தரசன்