ஜார்ஜ்டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், தனது பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது விடுமுறையில் செல்லவோ தேவையில்லை என பினாங்கு மாநில செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
இன்று காலை துணை முதலமைச்சர் மொகமட் ரஷீத் ஹாஸ்னான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“நானும் அதையே பரிந்துரைத்தேன். அதற்கு இரண்டாவது துணை முதல்வர் பி.ராமசாமியும் ஒப்புக் கொண்டார்.”
“மாநில செயற்குழு மற்றும் பினாங்கு மாநிலத்திற்கு, முதல்வரே (லிம் குவான் எங்) தொடர்ந்து தலைமை வகிப்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்று ரஷீத் இன்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டாவது துணை முதல்வர் ராமசாமி கூறுகையில், “அவர் தவறு செய்திருக்கமாட்டார் என்று நம்புகின்றோம். அவர் பதவி விலகத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.