(தான் சொந்த வீடு வாங்கிய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழும்போது – அதை லிம் குவான் எங் அவராகத்தானே எதிர்கொள்ள வேண்டும்? மாறாக, மக்களிடம் வழக்கு நிதி திரட்டுவதில் நியாயம் இருக்கிறதா? – செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஓர் அலசல்)
தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் அவரது ஆதரவாளர்களும் வழக்கு நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஜூலை 2ஆம் தேதி தனக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் உரையாற்றுகின்றார் லிம் குவான் எங்…
லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம். அதை ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல!
ஆனால், லிம் குவான் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஒரு சமூக நீதிப் போராட்டத்தினால் எழுந்ததோ, அல்லது ஓர் அரசியல் போராட்டத்தினால் விளைந்ததோ அல்ல!
அவர் வாங்கியது தனக்கு சொந்தமான ஒரு வீடு. அதை சந்தை விலையிலிருந்து குறைத்து வாங்கியது அவரது சாமர்த்தியம் என்றால், அதனால் எதிர்காலத்தில் இலாபம் அடையப் போவதும் அவர்தான்! அவரது கட்சியோ, மலேசிய மக்களோ அல்ல!
நாளையே அவர் வாங்கிய வீடு, இன்றைய மதிப்பிலிருந்து சில இலட்சங்கள் உயர்ந்தால், அந்த விலை உயர்வின் காரணத்தினால் கிடைக்கக் கூடிய இலாபமும் அவரையே – அல்லது அவரது குடும்பத்தினரைத்தான் – சாரும்.
அந்த இலாபத்தை அவர் பிரித்து கட்சிக்கோ, சமுதாயத்திற்கோ கொடுக்கப்போவதில்லை.
லிம் குவான் எங்கின் கவனக் குறைவு…
இத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டை வாங்கும்போது, ஒரு முதலமைச்சர் என்ற முறையில் எல்லா சட்டதிட்டங்களும் – நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை அணுக்கமாக அவரது தரப்பு கண்காணித்திருக்க வேண்டும்.
ஓர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதுவும் பினாங்கு போன்ற ஒரு முக்கியமான மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் குவான் எங்கின் நடவடிக்கைகளை கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு, கண் கொத்திப் பாம்பாக தேசிய முன்னணி கண்காணித்து வரும் என்பதை குவான் எங் தரப்பினர் உணர்ந்திருக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராளி என தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள அவர் முனையும்போது, தனது சொந்த நடவடிக்கைகளும் அத்தகைய ஊழல் சாயங்களுக்கு உட்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
தன்மீது குற்றம் சுமத்த ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அவர் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடாது.
1 எம்டிபி பிரச்சனையில் அடுக்கடுக்காகக் குற்றம் சுமத்தி நஜிப்பின் செல்வாக்கையும், அரசியல் ஆதரவையும் சின்னாபின்னப் படுத்திய ஜசெகவை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வலை விரித்துக் காத்திருந்த தேசிய முன்னணியிடம் இவ்வளவு கவனக் குறைவாக அவர் சிக்கியிருக்கக்கூடாது.
வழக்கின் முடிவில் நாளை குவான் எங் வெல்லலாம் – தோற்கலாம்! அது நீதிமன்றத்தின் முடிவு!
ஆனால், சட்ட அடிப்படையே இல்லாமல், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு மட்டும் இந்த வழக்கை ஜோடனை செய்திருக்கின்றார்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தினர் – என ஒரேயடியாக நாம் கூறிவிட முடியாது.
தெளிவான இரண்டு சட்டப் பிரிவுகளின் அடிப்படையில்தான் குவான் எங் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
மலாக்காவில் நடந்தது சமூக நீதிக்கானப் போராட்டம்
உதாரணமாக, மலாக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னால், அப்போதைய முன்னாள் மலாக்கா முதல்வர் ரஹிம் தம்பி சிக் தொடர்பான விவகாரத்தில், ஒரு மலாய்ப் பெண்ணுக்காகப் போராடி, அதற்காக சிறை சென்றவர் லிம் குவான் எங்.
ஆனால் அப்போது அவர் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். அவரது போராட்டம் சமுதாயப் போராட்டமாக – ஓர் ஏழை மலாய்க் குடும்பத்தினருக்காக அவர் நடத்திய போராட்டமாக – பார்க்கப்பட்டது.
அதற்காக, அன்று வழக்கு நிதி திரட்டப்பட்டிருந்தால், அது ஒரு சமூகப் போராட்டத்திற்காக என நாம் கருதலாம்.
ஆனால் இப்போது நடப்பதோ அவர் தனக்கென சொந்தமாக ஒரு வீடு வாங்கிய விவகாரம்.
ஜூலை 2ஆம் தேதி நடத்தப்பட்ட லிம் குவான் எங் ஆதரவுப் பேரணியில் திரண்ட பினாங்கு மக்கள்….
இதற்காக, வழக்கு நிதி திரட்டுவது இந்த விவகாரத்தைத் திசை திருப்ப – மக்கள் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்ட – நடத்தும் ஒரு நாடகமாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர, அதன் காரணமாக குவான் மீதான மதிப்பு எள்ளளவும் கூடவில்லை.
லிம் குவான் எங் என்ன செய்திருக்க வேண்டும்?
இந்நிலையில் குவான் எங் என்ன செய்திருக்க வேண்டும்?
“இது நான் சொந்தமாக வீடு வாங்கிய பிரச்சனை. இதனை நான் பார்த்துக் கொள்கின்றேன். நான் தவறு செய்யவில்லை. வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். இது அரசியல் உள்நோக்கத்திற்காக, என்னை அரசியல் உள்நோக்கத்தோடு வீழ்த்தும் சதித்திட்டம்” என்றெல்லாம் அவர் கூறியிருந்தால் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும்.
ஆனால், ஏதோ, இது ஒரு சமுதாயப் பிரச்சனை போல இதனை திசை மாற்றி, இதற்காக நாடுமுழுவதும் பிரச்சாரத்தில் இறங்குவதும், வழக்கு நிதி சேகரிப்பதும், குவான் எங்கும் அரசியல் குழப்பத்தில் சிக்கி விட்டாரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
வழக்கின் முடிவு தனக்கு எதிராக திரும்பக் கூடும் என்ற அச்சத்தில் இப்போதே முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றாரோ அவர் என்ற எண்ணத்தையும் நம்மிடையே விதைக்கின்றது.
வழக்கு முடியும் வரை விலகலாமே!
அதைவிட முக்கியமாக, “வழக்கு முடியும் வரை நான் பதவியிலிருந்து விலகி இருக்கின்றேன். வழக்கில் பினாங்கு மாநில அரசாங்கமும் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பதால், வழக்கு சுமுகமாக, அரசியல் இடையூறு இன்றி நடைபெற ஒத்துழைக்கின்றேன்” என்று அவர் அறிவித்திருந்தால், அவரது அரசியல் செல்வாக்கும் மேலும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். அவர் கொண்ட கொள்கைக்கும் மரியாதை ஏற்பட்டிருக்கும்.
அவர் விலகி நின்றாலும், பினாங்கு மாநிலத்தில் தொடர்ந்து ஜசெகவை வலுவாக வைத்திருக்கக்கூடிய சிறந்த பல தலைவர்கள் அந்தக் கட்சியில் இருக்கின்றார்கள்.
நாளையே, ஓர் அம்னோ தலைவரையோ அல்லது பிரதமர் நஜிப்பையோ பார்த்து இது போன்று செய்ய உங்களுக்குத் தைரியம் இருக்கின்றதா என குவான் எங் கேள்விக்கணைகள் தொடுக்க முடியும்.
“நஜிப் பதவி விலகவில்லையே! நான் மட்டும் ஏன் விலக வேண்டும்?” என்று கூறுவது நொண்டிச்சாக்கு! நியாயமான அரசியல் சித்தாந்தமும் இல்லை.
நஜிப் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், இன்றுவரை அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை.
ஒன்று, நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டால் – அந்த வழக்கு நடந்து முடியும் வரை நஜிப் விலக வேண்டியதில்லை – அதுவரை அவர் நிரபராதி – என்று லிம் குவான் எங் கூற வேண்டும்,
அல்லது, குற்றம் சாட்டப்பட்டுவிட்டால் சுமுகமான முறையில், அதிகாரத் தலையீடுகள் இன்றி வழக்கு நடைபெற வழிவிடும் வகையில் நஜிப் பதவி விலகிக் கொள்ள வேண்டும் என்று கூற வேண்டும்.
இரண்டாவது வாதத்தையே குவான் எங் தனது அரசியல் சித்தாந்தமாகக் கொண்டால், பின்னர் தனக்கென வரும்போது மட்டும் நஜிப் விலகவில்லையே நான் மட்டும் ஏன் விலக வேண்டும் என்று வாதிடுவது, கேட்பதற்கு நன்றாக இருக்கலாம் – ஆனால் அதுவே நியாயமாக இருக்க முடியாது!
அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகின்றேன் – அவனை விலகச் சொல் நான் விலகுகின்றேன் – என்றெல்லாம் நாயகன் கமலஹாசன் பாணியில் வாதாடுவது, ஒரு கொள்கையின் பிடிப்பைக் காட்டவில்லை. மாறாக, பலவீனத்தைத்தான் உணர்த்துகின்றது.
லிம் குவான் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கைத் தொடர்ந்து, வழக்கு நிதி திரட்டும் விவகாரத்தில், லிம் குவான் எங் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, அவரும் அரசியல் தடுமாற்றத்தில் சிக்கிக் கொண்டு விட்டார் என்பதும் –
தனது கொள்கை இலக்குகளிலிருந்து வழி தவறும் குழப்பத்தில் இருக்கின்றார் என்பதும் – தெளிவாகப் புலப்படுகின்றது.
-இரா.முத்தரசன்