சென்னை, மார்ச்.18- இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
“இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் தெரிவித்து வரும் கவலைகளை இலங்கை அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள தமிழ் சமுதாயம் மிகவும் கொதிப்படைந்துள்ளது.”
“தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் 22வது கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும். மேலும் இந்த தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் தேவையான திருத்தங்களை இந்தியா கொண்டு வர வேண்டும். இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், இலங்கை தமிழர்கள் சிங்களர்களுக்கு நிகராக சுய கௌரவத்துடனும் முழு உரிமையுடனும் வாழும் சூழல் ஏற்படும் வரை அந்த நாடு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறேன்.”
“இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்க தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் கவுன்சிலின் 22வது கூட்டம் மிகச் சரியான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது என்ற தைரியமான முடிவை இந்தியா எடுக்க வேண்டும். மேலும் இந்த தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் பொருத்தமான திருத்தங்களை இந்தியா கொண்டு வர வேண்டும்.”
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் சாம்பியன் என்ற முறையில் இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் வாடும் சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக வலுவான நிலையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”
– இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.