Home Featured நாடு சோதிநாதன்-பாலா அணியினர் மீண்டும் மஇகாவில்!

சோதிநாதன்-பாலா அணியினர் மீண்டும் மஇகாவில்!

859
0
SHARE
Ad

Palanivel -Sothinathan-Balakrishanகோலாலம்பூர் – கடந்த ஜூலை 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பழனிவேல் அணியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் மீண்டும் மஇகாவில் இணைவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஇகா தலைவர்கள் சங்கப் பதிவகத்தினருடன் சதியாலோசனை செய்து தங்களுக்கு சாதகமான முடிவுகளை சங்கப் பதிவகத்திடம் இருந்து பெற்றனர் என்று கூறி ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர், மஇகா தலைவர்கள் மற்றும் சங்கப் பதிவதிகாரிகள் மீது வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கின் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்றும், வழக்கின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் இராமலிங்கம் தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால், முதல் சுற்றிலேயே, மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் உள்ளிட்ட பிரதிவாதிகள் எழுப்பியிருந்த ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்டு நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக இராமலிங்கம் தரப்பினர் அறிவித்துள்ளதோடு, தொடர்ந்து நீதிமன்றப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வராத சோதிநாதன்

sothinathanஆனால், இனியும் இதுபோன்ற நீதிமன்றப் போராட்டங்களில் நேரத்தை வீணடிக்காமல், அரசியல் ரீதியான தீர்வு காணும் அணுகுமுறையைக் கையாள வேண்டும் என பழனிவேல் ஆதரவாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்று, காலத்தையும், பணத்தையும் விரயமாக்குவதை அவர்கள் விரும்பவில்லை.

குறிப்பாக, டத்தோ எஸ்.சோதிநாதன் (படம்) இத்தகைய சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்றும் அதனால்தான் அவர் வழக்கு நடந்தபோது நீதிமன்றத்திற்கே வந்து ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறுகின்றார்கள்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, பல முக்கியத் தலைவர்கள் நீதிமன்றம் வந்திருந்தாலும், சோதிநாதன் வரவில்லை.

வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து சோதிநாதன் பலரிடம் நேரடியாகப் பேசி வருகின்றார் என்றும், மீண்டும் மஇகாவுக்கு திரும்புவதுதான் சரியான முடிவாக இருக்கும் என அவர் பழனிவேல் அணியினர் சிலரிடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஜோகூர் மாநிலத்தின் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் இதே போன்ற அரசியல் அணுகுமுறையையும், சிந்தனையையும் கொண்டிருக்கின்றார் என்கின்றனர் சில ஜோகூர் மஇகா தலைவர்கள்.

Dato S.Balakrishnanஇதனைத் தொடர்ந்து சோதி-பாலா தரப்பினர் மீண்டும் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு திரும்புவதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகள் பின்னணியில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த முடிவுகள் வெளிவரலாம் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெலுக் கெமாங்கைக் குறிவைக்கும் சோதிநாதன்…

சோதிநாதனின் மனமாற்றத்திற்கு முக்கியக் காரணம் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்தான் என்கின்றது அவருக்கு நெருங்கிய வட்டாரம் ஒன்று.

தெலுக் கெமாங் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் – அந்தத் தொகுதியை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கும் சோதிநாதன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் தெலுக் கெமாங் தொகுதியில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார்.

2001ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுக் கெமாங் தொகுதியில் வெற்றி பெற்ற சோதிநாதன் தொடர்ந்து 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால், 2008ஆம் ஆண்டில் மலேசியாவைத் தாக்கிய அரசியல் சுனாமியால், சோதிநாதனும் தெலுக் கெமாங் தொகுதியில் பிகேஆர் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

2013 பொதுத் தேர்தலில் சோதிநாதன் மீண்டும் போட்டியிட அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வாய்ப்பு வழங்கவில்லை.

தொடர்ந்து இப்போதிருப்பது போன்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், 14வது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்காது என்பதையும் அவ்வாறு அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் நுழைய முடியாவிட்டால் அத்துடன் மஇகாவின் வழியான அடுத்த கட்ட அரசியலும் முடிவுக்கு வந்துவிடும் என்பதையும் சோதிநாதன் நன்கு உணர்ந்துள்ளார் என்கிறார் தெலுக் கெமாங் தொகுதியிலுள்ள அவருக்கு நெருக்கமான மஇகா தலைவர் ஒருவர்.

2018ஆம் ஆண்டில்தான் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களின் சாதக முடிவுகளின் காரணமாக, பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

பாஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி பிளவுண்டு இருக்கும் காலகட்டத்திலேயே பொதுத் தேர்தலை நடத்தி விடுவதுதான் தேசிய முன்னணிக்கு சாதகம் என்ற கருத்து நிலவும் வேளையில், மஇகாவில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் தொகுதிகள் பெறுவதற்கு குறிவைக்க வேண்டும் என்பது பழனிவேல் அணியில் உள்ள சில தலைவர்களின் எண்ணமாக இருக்கின்றது.

தனி மனிதத் தாக்குதல்களால் கருத்து வேறுபாடுகள்

Palanivelஅதே வேளையில், அண்மையக் காலமாக தங்களின் அரசியல் போராட்டம் திசை மாறிச் செல்கின்றது – கொண்ட கொள்கையை விட்டு – இலக்கை விட்டு விலகிவிட்டது என்ற கருத்தும் பழனிவேல் தரப்பினரிடையே நிலவுகின்றது.

தங்களின் உண்மையான நோக்கத்தை – போராட்டத்தை – புரிந்து கொள்ளாத ஒரு சிலர் பழனிவேல் அணியில் திடீரென உள்ளே நுழைந்து, தங்களின் சுயலாபத்திற்காக, சுய நோக்கத்திற்காக, தங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர் என்ற ஆதங்கம் சிலரிடையே எழுந்துள்ளது.

MIC logo“குறிப்பாக, மஇகா தலைவர்கள் சிலர் மீது ஊழல் புகார் என தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது, நம்மை நாமே காறி உமிழ்ந்து கொள்வது போலாகும். கட்சியில் நமக்குரிய இடம் மீண்டும் கிடைக்க வேண்டும் – நாம் அனைவரும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் நமது போராட்டமே தவிர, மஇகாவினரிடையே யார் ஒழுக்கமானவர்கள் – ஊழலற்றவர்கள் என்று கண்டுபிடிப்பதும் அவர்கள் மீது ஊழல் புகார் கொடுப்பதும் நமது வேலையல்ல. மீண்டும் நாம் கட்சிக்குத் திரும்பும்போது, இப்போது நாம் புகார் கூறும் தலைவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எப்படி அவர்களோடு இணைந்து பணியாற்றுவது?” எனக் கேள்வி எழுப்பினார், பழனிவேல் அணியில் நீண்டகாலமாக இயங்கிவரும், முன்னாள் மஇகா தலைவர் ஒருவர்.

“அப்படிப் பார்த்தால், இங்கு யார் ஒழுக்கமானவர்கள்? யார் ஊழல் புகார் இல்லாதவர்கள்? கேள்வி எழுப்புவர்கள் மட்டும் அப்பழுக்கற்ற காந்தியவாதிகளா?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் அந்தக் கிளைத் தலைவர்.

நீதிமன்றப் போராட்டங்களால் இனி அரசியல் தீர்வு பிறக்கப் போவதில்லை – மஇகா தலைவர்கள் மீதான தனிமனிதத் தாக்குதல்கள் கூடாது – என்பது போன்ற சிந்தனைகள் பழனிவேல் அணியினரிடையே ஆழமாக வேரூன்றி வருவதால், சோதிநாதன், ஜோகூர் பாலா போன்றவர்கள் மீண்டும் மஇகாவுக்குத் திரும்பும் சூழ்நிலை வந்தால்,

அவர்களோடு இணைந்து கணிசமான எண்ணிக்கையில் பலர் மீண்டும் மஇகாவுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்