புதுடில்லி – பாஜகவின் நியமன உறுப்பினராக இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்ய சபா) இடம் பெற்றிருந்த நவ்ஜோத் சிங் சித்து இன்று தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதைத் தொடர்ந்து அவர் அர்விந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவிருக்கின்ற நிலையில், அந்தக் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் முன் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில் நவ்ஜோத் சிங்கின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தனது பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என நம்பப்படுகின்றது.
நவ்ஜோத் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய அவர் தனது வித்தியாசமான கிரிக்கெட் விமர்சனங்களால் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.
பஞ்சாப் முழுக்க நன்கு அறிமுகமான அவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வராக அறிவிக்கப்படலாம் என்றும், இன்று திங்கட்கிழமையே அவர் அர்விந்த் கெஜ்ரிவாலைச் சந்திப்பார் என்றும் புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.