சென்னை – கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சுக்ரா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தொடுத்திருந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கபாலி நாளை உலகமெங்கும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகின்றது.
மலேசியாவில் இன்று இரவு பிரமுகர்களுக்கான சிறப்புக் காட்சி கோலாலம்பூர் திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வேளையில், இன்றிரவே சில திரையரங்குகளில் கபாலி திரையிடப்படுகின்றது.
2014இல் லிங்கா படத் திரையீட்டினால் தங்களுக்கு ஏற்பட்ட 89 இலட்ச ரூபாய் நஷ்டத்தை திருப்பிக் கொடுப்பதாக லிங்கா படத் தயாரிப்பாளர்கள் உறுதி கூறியதாகவும், அந்தத் தொகை திரும்பச் செலுத்தப்படும்வரை கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் லிங்கா படத்துக்கான விநியோகஸ்தரான சுக்ரா பிலிம்ஸ் இடைக்காலத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.