Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘கபாலி’ – மலேசிய குண்டர் கும்பல் பற்றிய கதை!

திரைவிமர்சனம்: ‘கபாலி’ – மலேசிய குண்டர் கும்பல் பற்றிய கதை!

1112
0
SHARE
Ad

kabali_கோலாலம்பூர் – உலகளவில் கபாலி திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வைப் பார்க்கும் போது, படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? பார்க்கலாமா? வேண்டாமா? போன்ற கேள்விகளுக்கே இடமின்றி எல்லோரும் அவசியம் பார்த்தே தீரவேண்டும் என்று எண்ணும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் கபாலி கொண்டாட்டம் தான்..

ஆக, என்ன தான் விமர்சனம் எழுதினாலும், மக்கள் திரையரங்கிற்குச் சென்று கபாலியைப் பார்க்கப் போவது நிச்சயம்.

என்றாலும், கபாலியை எப்படிப்பட்ட மனநிலையோடு சென்று பார்த்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு சில தகவல்கள் இங்கே..

#TamilSchoolmychoice

ரஜினி ரசிகர்களுக்கு

kabali051115_3சூப்பர் ஸ்டார் திரும்பி வந்துவிட்டார்.. 25 வருஷத்துக்கு முன்னாலே எப்படி இருந்தாரோ அதே துடிப்பு, இளமை, ஸ்டைல், கம்பீரம் எனத் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலும் அரங்கை அதிர வைக்கிறார். டீசரில் மிரட்டியிருப்பது அதில் ஒரு சிறு முன்னோட்டம் தான்.. படத்தில் அதை விட அதிகமாகப் பல காட்சிகளில் தனது நடிப்பால் அசத்துகிறார். கைதட்டல்களும், விசில் சத்தமும் படம் முடியும் வரை ஓயப்போவதில்லை.

லிங்காவிற்கும், இதற்கும் முற்றிலும் மாறுபட்ட தோற்றம். குறிப்பாக எந்த ஒரு செயற்கைத் தனமும் இல்லாமல் அவரது வயதிற்கு ஏற்ப சண்டைக் காட்சிகளை அமைத்திருப்பது சிறப்பு. நிச்சயமாக ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைக்கும்.

மற்ற நடிகர்களின் நடிப்பு

1ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‘அட்டக்கத்தி’ தினேஷ், கலையரசன், கிஷோர், ஜான்விஜய், ரித்விகா, ஹரி (மெட்ராராஸ் ஜானி), தாய்வான் நடிகர் வின்ஸ்டன் எனப் பல நடிகர்கள் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே நடிப்பிற்கு வேலை கொடுக்கும் வகையில் அருமையான கதாப்பாத்திரங்கள்.

இவர்கள் அனைவரையும் அப்படியே மலேசியர்கள் போல் தோற்றத்திலும், உடல்மொழியிலும், வசனங்களிலும் மாற்றியிருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

குறிப்பாக, தன்ஷிகா.. திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகத் தெரிகிறார். ஆக்சன் காட்சிகளிலும் அதிர வைக்கிறார். அடுத்து தினேஷ்.. பாட்ஷாவின் ஜனகராஜை ஞாபகப் படுத்துகிறார். அவரது நடிப்பும், உடல்மொழியும் தனித்துவம் காண்கிறது. கபாலி மீதான மரியாதையை அப்படியே உடல்மொழியில் வெளிப்படுத்துகிறார்.

கலையரசன், ஜான்விஜய், ரித்விகா என இன்னும் பலரின் இயல்பான நடிப்பு வியக்க வைக்கிறது.

உலகத்தமிழ்சினிமா ரசிகர்களுக்கு

நிச்சயமாக இது உங்களுக்கு இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக இருக்கும். முற்றிலும் திருநெல்வேலி தமிழ் பேசும் படங்களைப் பார்த்திருப்பீர்கள், கோவைத் தமிழ் பேசும் படங்களைப் பார்த்திருப்பீர்கள், சென்னைத் தமிழ் பேசும் படங்களைப் பார்த்திருப்பீர்கள் இதோ இப்போது படம் முழுவதும் மலேசியத் தமிழர்களில் ஒரு சிலத்தரப்பினர் பேசும் மலாய் கலந்த தமிழ்.

இதை புதுமையாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதை நீங்கள் புரியாமல் குழப்பிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஆளவந்தானையும், ஹேராமையும் முதன் முதலாகப் பார்த்த போது கமல் ரசிகர்களே எப்படி கதை பிடிபடாமல் குழம்பிப் போனார்களோ, அந்தக் குழப்பம் இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக ரஜினி ரசிகர்களுக்கு ஏற்படலாம். இதுவரை பார்த்த சூப்பர் ஸ்டார் படம் வேறு.. கபாலி வேறு.. எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், ரஜினி தனது வசனத்தை தனது பாணியில் தான் பேசியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் மலாய் கலந்த தமிழ் பேச மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் முதல், படத்தின் சின்னச் சின்ன கதாப்பாத்திரங்கள் வரை மலேசியத் தமிழ் பேசுகிறார்கள். “பொன்ன சூப்பரா இருக்கு”, “செம்மியா இருக்கு”, அடலா கோழிக்கறி”, “சாவடியா இருக்கு”, “என்னலா இப்டி சொல்ற?” இப்படியாகப் படம் முழுவதும் வசனங்களின் ஊடே வரும் வார்த்தைகள் இருக்கின்றன.

kabali-mos_060716121900இன்னொரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும். இது மலேசியாவில் இருக்கும் கேங்க் (குண்டர் கும்பல்) பற்றிய கதை. மலேசியாவைப் பொறுத்தவரை கேங் என்பது தனி. அதில் மற்ற இனத்தவர்களோடு மலேசியத் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

ஆனால் மலேசியத் தமிழர்களின் கலாச்சாரத்தை இப்படம் மூலமாக, முதன் முதலாக அறியும் உலகத் தமிழர்களுக்கு, “மலேசியத் தமிழர்கள் என்றால் இவ்வளவு பயங்கரமாக இருப்பார்களா?, குண்டர் கும்பல்களில் தான் இருப்பார்களா?” என்ற கண்ணோட்டம் ஏற்பட்டு விடும் வாய்ப்புள்ளது. படத்தில் நீங்கள் பார்ப்பது மலேசியத் தமிழர்களில் ஒரு சாரார் மட்டுமே..

மலேசியாவிற்குத் தோட்ட வேலைக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்கள், இங்கு சஞ்சிக்கூலிகளாக வேலைப் பார்த்துப் பல போராட்டங்களுக்குப் பின்னர் படித்து, நகர்புறங்களை நோக்கி நகர்ந்த காலக்கட்டங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், முதலாளித்துவம், அடிமைத்தனம் ஆகியவற்றின் விளைவால் குண்டர் கும்பல்கள் உருவானதையும் பட்டும் படாமல் மேலோட்டமாகச் சொல்கிறது படம்.

அந்தக் காலக்கட்டத்தில் நடந்த மாற்றங்களைப் பற்றியும், கேங்கில் மலேசியத் தமிழர்கள் சேர்ந்ததன் அடிப்படைக் காரணம் பற்றியும் இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் மலேசியப் படமான ‘ஜகாட்’ பார்க்க வேண்டும். தோட்டப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி ஏன் மலேசிய இந்தியர்கள் போக நினைத்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் மலேசியப் படமான ‘மறவன்’ பார்க்க வேண்டும்.

எனவே, கபாலி காட்டும் மலேசியக் கலாச்சாரமும், தமிழர்களும் இங்கு இருப்பவர்களில் ஒரு சாரார் மட்டுமே.

நடப்புச் சூழலில் மலேசியத் தமிழர்களின் மறுபக்கம் வேறு. அரசாங்கம், அறிவியல், சினிமா, தொழில்நுட்பம், ஊடகம், தமிழ், விளையாட்டு எனப் பெருமைப்படும் வகையில் பல்துறைகளில் மலேசியத் தமிழர்கள் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் உரிமைகளைப் பெற போராட்டம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அதற்கு குண்டர் கும்பலோ, கபாலி போன்ற ஒரு ஹீரோவோ தேவைப்படுவதில்லை.

ஆக, கபாலி.. இரு குண்டர் கும்பல்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம். அதில் கபாலியின் வாழ்க்கை ஒரு சம்பவம் மட்டுமே. படத்தின் சுவாரசியம் கருதி பல விசயங்களை இங்கே விளக்கமாகச் சொல்ல இயலவில்லை.

திரைக்கதை 

ரஜினி அறிமுகம் தொடங்கி வேகம் எடுக்கும் திரைக்கதை இடைவேளைக்கு முன்பு ஒரு சில காட்சிகளிலேயே வேகம் குறைந்து தொய்வடையத் தொடங்கிவிடுகின்றது. நாசர் வரும் காட்சிகளில் ரசிகர்கள் குழம்பிப் போக வாய்ப்புள்ளது. எனினும் இடைவேளைக்குப் பின்பு இந்தியாவில் இருந்து மலேசியா வந்த பின்பு திடீரென வேகமெடுத்து இறுதியில் ரஜினி பாணியிலேயே கதை முடிகின்றது.

மலேசிய ரசிகர்களுக்கு 

நிச்சயமாக கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். காரணம், இதுவரை குண்டர் கும்பல்களில் மலேசிய இந்தியர்கள் வெட்டுப் பட்டு சாவதையும், இறுதி ஊர்வலம் முதல் அதன் பின் நடக்கும் பழிவாங்கல்கள் வரை அனைத்தையும் பார்த்தோ, காதால் கேட்டோ, நாளிதழ்களில் படித்தோ கவலையில் புலம்பியிருப்பீர்கள்.

Radhika-Rajinikanthஆனால் மலேசியாவைப் பொறுத்தவரையில் அவை எங்குமே ஒரு ஹீரோயிசமாகப் பார்க்கப்படுவதில்லை. கபாலியில் அவை சற்று ஹீரோயிச சாயல் பூசப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் ‘நம்பர்கள்’ போதாது என்று புதிய ‘நம்பர்’ ஒன்றைச் சொல்கிறார்கள். மலேசிய இந்திய இளைஞர்கள் புதிய விசயங்களால் ஈர்க்கப்படும் அபாயங்களும் உள்ளன. அந்தத் தாக்கம் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு அதிகமாக இருக்கலாம்.

சினிமா என்ற கோணத்தில் பார்க்கும் போது, உங்கள் அபிமான மலேசிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், பாடகி திலா லஷ்மண், தொலைக்காட்சி நடிகர்கள் எனப் பல முகங்களை அதில் பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் முதல் மற்ற நடிகர்கள் வரை மலேசியர்கள் தினமும் கேட்கும் தமிழிலேயே பேசி நடித்திருப்பது ரசிக்க வைக்கும்.

ஒளிப்பதிவு, இசை

ஜி.முரளியின் ஒளிப்பதிவில், மலேசியாவின் நகர்புறங்களும், வீதிகளும், இரவு கேளிக்கை விடுதிகளும் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரசிகர்களுக்கு அவை பிரமிப்பை ஏற்படுத்தும்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்க பலம் சேர்த்துள்ளன.

வேறு என்ன? மலேசியாவில் பிரச்சினையைத் தூண்டலாம் என்பதற்காக சிலக் காட்சிகளும், வசனங்களும் தணிக்கைக் குழுவினரால் வெட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

என்றாலும், வெட்டுக் குத்து கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற காட்சிகள் இருக்கத் தான் செய்கின்றன.

இதுவரை மலேசியாவின் பிரம்மாண்ட கட்டிடங்களிலும், அழகிய கடற்கரைப் பகுதிகளிலும், பாலங்களிலும் நடிகர், நடிகைகளை ஆடவிட்டுப் பாடல்காட்சிகளைப் பதிவு செய்து வந்த தமிழ் சினிமா, முதன் முறையாக சூப்பர் ஸ்டார் நடிப்பில், மலேசிய இந்தியர்களின் ஒரு பக்கத்தை உலக அளவில் கொண்டு சென்று காட்டியிருக்கிறது.

ஆனால், அது மலேசிய இந்தியர்களின் மீதான தவறான கண்ணோட்டமாக மாறிவிடக் கூடாது என்பதே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

– ஃபீனிக்ஸ்தாசன்