பிரான்ஸ் – பிரான்சிலுள்ள தேவாலயம் ஒன்றில் செவ்வாய்கிழமை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, அங்கு நுழைந்த இருவர், தாங்கள் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்களை மிரட்டியதோடு, பாதிரியாரை மண்டியிட வைத்து, அவரது கழுத்தை அறுத்துள்ளனர்.
பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தேவாலயத்தின் பாதிரியார், இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் வழிப்பாட்டுக்கு வந்த இரண்டு பேர் உட்பட 5 பேரை அவர்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்ததாகவும், பின்னர் 85 வயதான அந்தப் பாதிரியாரைக் கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
கத்திக் காயத்திற்குள்ளான மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்நாட்டு காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாக்குதலைப் புரிந்த அவ்விருவரையும் பிரான்ஸ் காவல்துறை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.