கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிப்பது போலான திருத்தப்பட்ட படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த பெண்ணை மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) காவல்துறையின் ஒத்துழைப்போடு கண்டறிந்துள்ளது.
அவரது பேஸ்புக் பெயர் ‘ரது நாகா’ என்பதையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
மேலும், அப்பெண், பிரதமரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர், பகாங் சுல்தான் சுல்தான் அகமட் ஷா ஆகியோரையும் குறி வைத்து அவமதித்துள்ளதாகவும் எம்சிஎம்சி அறிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை காலை ஜாலான் கிள்ளான் லாமா அருகே உள்ள அப்பெண்ணின் இருப்பிடத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்து செல்பேசிகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.
அதோடு, சந்தேகிகப்படும் அப்பெண்ணிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும், அதே போல் திருத்தப்பட்ட படங்களைப் பயன்படுத்தி பேஸ்புக் பதிவேற்றம் செய்த மேலும் பலரைக் கண்டறிய அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233-ன் படி, எம்சிஎம்சி விசாரணை மேற்கொள்கிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட் வரையில் அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.