கோலாலம்பூர் – 70வது ஆண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கும் மஇகா, எத்தனை அரசியல் கட்சிகள் முளைத்தாலும் அவற்றைக் கண்டு அஞ்சியதில்லை என்றும் அதே வேளையில் 1946 முதல் எவ்வாறு இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காக போராடி வந்துள்ளதோ, அதே போன்று தொடர்ந்து தனது போராட்டத்தை, தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி வரும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் நலன்களுக்கான ஒரே குரலாக, ஒருமித்த குரலாக, மஇகா தொடர்ந்து ஒலிக்கும் என்றும் சுப்ரா தொடர்ந்து கூறினார்.
மஇகாவின் 70வது ஆண்டுக் கொண்டாட்டங்களின் தொடர்பில் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் சுகாதார அமைச்சருமான சுப்ரா தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் இடையில் ஓர் ஆழமான விருப்பு-வெறுப்பு கலந்த பிணைப்பு இருக்கின்றது. சுதந்திரம் காலம் முதல் அரசியல் ரீதியாக இந்தியர்களை அரசாங்கத்தில் பிரதிநிதிக்கின்ற கட்சி என்பதால் இந்தியர்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் மஇகா தீர்த்து விடும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மக்களிடத்தில் இருக்கின்றது. சில சமயங்களில் அவ்வாறு நடைபெறாமல் போகும்போது அதன் காரணமாக மஇகா மீதான கண்டனங்களும் இயல்பாகவே எழுகின்றன. இதனை நன்கு நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால், நாங்கள் தொடர்ந்து இந்திய சமுதாயத்தோடு தொடர்பில் இருந்து, அவர்களோடு இணைந்து பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடி வருகின்றோம்” என்றும் சுப்ரா தனது பேட்டியில் கூறியிருக்கின்றார்.
சமூக ஊடகங்களில் மஇகாவுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளில் இருந்து, அரசாங்கத்தில் இந்தியர்களுக்கென இருக்கும் ஒரே அரசியல் பிரதிநிதித்துவம் என்பதால்தான் அத்தகைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் எனவும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி மஇகா தலைமையகத்தில் 70ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மஇகா கொடியேற்றும் சுப்ரா…
இதற்கிடையில் எத்தனை அரசியல் கட்சிகள் உதித்தாலும், அவை மஇகாவின் ஆளுமைக்கும், வலிமைக்கும் ஈடாக முடியாது என்றும் மஇகா தங்களுக்காகவே உதித்த கட்சி, தொடர்ந்து போராடுகின்ற கட்சி என்பதை இந்திய மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
மற்ற கட்சிகளையும் தங்களோடு இணைத்துக் கொண்டு பணியாற்ற மஇகா தயாராகவே இருக்கின்றது எனக் குறிப்பிட்ட சுப்ரா, கட்சிக்குத் தற்போது இருக்கும் மிகப் பெரிய சவால், பொருளாதார, கல்வி ரீதியாக ஆகக் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்களை மேல்நிலைக்குக் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியடைவதுதான் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
70வது ஆண்டுக் கொண்டாட்டங்களின் சுலோகமாக, “ஒரே குரல் ஒன்றே இலக்கு” என்ற வாசகத்தைக் கொண்டிருப்பது பொருத்தமான ஒன்று, என்றும் இந்தியர்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான நோக்கத்தைக் கொண்ட வாசகம் இது என்றும் சுப்ரா வர்ணித்தார்.