கோலாலம்பூர் – பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்வு பெற்ற திருமதி தங்கேஸ்வரிக்கு ம.இ.கா சார்பான தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட கட்சியின் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இப்பதவியை மீண்டும் ம.இ.கா விற்கு முன்மொழிந்த நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கும் பேராக் மாநில முதல்வர் டத்தோஶ்ரீ ஜம்ரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் .
“ஒரு வழக்கறிஞரான திருமதி தங்கேஸ்வரி அரசியலிலும் சட்டத் துறையிலும் பரந்த அனுபவம் உடையவர் . நீண்ட நாள் ம.இ.காவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் . தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு இப்புதிய பொறுப்பை அவர் திறம்பட செயலாற்ற முடியும் என நம்புகின்றேன்” என்றும் டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று பேராக் சட்டமன்ற அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கேஸ்வரியுடன், முன்னாள் அவைத் தலைவர் தேவமணி, தங்கேஸ்வரியை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மஇகா மகளிர் பகுதித் தலைவி மோகனா முனியாண்டி…
இப்பதவியானது மகளிருக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றும் மகளிர் பகுதியினரின் சேவைகளை மதிக்கும் வகையில் அவ்வப்போது ம.இ.கா தகுந்த அங்கீகாரங்களை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் டாக்டர் சுப்ரா தெளிவுபடுத்தினார்.
அதே சமயத்தில் மகளீர் பகுதியினர் இவ்வாறான பொறுப்புகளைக் கொண்டு சமுதாயத்திற்கு இன்னும் ஆக்ககரமான சேவையை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தனது அறிக்கையில் கூறினார்.