ரியோ டி ஜெனிரோ – டென்னிஸ் விளையாட்டில் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்ந்து வரும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஒலிம்பிக்சில் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலும் வெற்றியாளராகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு வந்துள்ளார்.
ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் அவர் உக்ரேனின் முதல் நிலை ஆட்டக்காரரான எலினா சுவிடொலினா என்ற 21 வயது இளம் பெண்ணிடம் தோல்வி கண்டு, டென்னிஸ் விளையாட்டு உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு முன் எலினாவுடன் நான்கு ஆட்டங்களில் மோதியிருக்கும் செரினா, அந்த நான்கிலும் வெற்றி பெற்றிருக்கின்றார். எலினா தற்போது டென்னிஸ் விளையாட்டில் உலக அரங்கில் 20வது நிலையில் இருந்து வருகின்றார்.
இரட்டையர் ஆட்டத்திலும் தனது சகோதரி வீனஸ் சகோதரியுடன் விளையாடிய செரினா ஏற்கனவே இந்த ரியோ ஒலிம்பிக்சில் தோல்வி கண்டு விட்டார். தற்போது ஒற்றையர் ஆட்டத்திலும் தோல்வி கண்டு வெளியேறும் நிலைமைக்கு ஆளாகி விட்டார்.
இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று சாதனை படைத்திருக்கும் 34 வயது செரினா இந்த முறை ஒலிம்பிக்ஸ் ஒற்றையர் ஆட்டத்திலும் தங்கம் பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
செரினாவை இரண்டு நேர் ஆட்டங்களில் (செட்) தோற்கடித்ததன் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டார் உக்ரேனின் எலினா சுவிடொலினா (மேலே படம்).