ரியோ டி ஜெனிரோ – போனவர்கள் அனைவருமே எங்கே வெறுங்கையுடன் வருவார்களோ என இந்திய மக்கள் அனைவரும் ஏங்கிக் காத்திருக்க, ஒரே ஒரு இந்திய விளையாட்டாளர் மட்டும் அனைவரின் வயிற்றிலும் பால் வார்த்திருக்கின்றார்.
அதிலும் அவர் ஒரு பெண்மணி – சாக்ஷி மாலிக் – எதிர்பாராத விதமாக பெண்களுக்கான 58 கிலோ எடை பிரிவில், மல்யுத்தப் போட்டியில் கிரிக்ஸ்தான் போட்டியாளர் ஐசுலுலு டினிபெக்கோவா என்பவரை வெற்றி கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்திருக்கின்றார்.
மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் போட்டியில் அவர் 8-5 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
இந்தியாவில் மல்யுத்தம் அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு விளையாட்டாகும். ஆனாலும், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மல்யுத்தம் என்பது, ஆண்- பெண் பாரபட்சமில்லாமல் ஒரு பாரம்பரிய போட்டி விளையாட்டாக, அந்த மண்ணுக்கே உரிய கலாச்சாரமாகப் பார்க்கப்படுகின்றது.
அண்மையில் வெளிவந்த சுல்தான் என்ற இந்திப் படத்தில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் கதாநாயகன் சல்மான் கான் என்றும், படத்தில் அவரது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவும் ஒரு மல்யுத்த வீராங்கனை என்றும் காட்டப்பட்டிருந்தது. படமும் வசூலில் சக்கைப் போடு போட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், நேற்று ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்ற 23 வயது சாக்ஷியும் ஹரியானா மாநிலத்தின் ரக்தாக் என்ற நகரைச் சேர்ந்தவர் என்பதுதான்!
ஒலிம்பிக்சில் நான்காவதாக பதக்கம் பெறும் இந்திய வீராங்கனையாக சாக்ஷி திகழ்கின்றார்.
2000 ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்சில் பளுதூக்கும் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி, 2012 இலண்டன் ஒலிம்பிக்சில் மேரி கோம், அதே இலண்டன் ஒலிம்பிக்சில் பூப்பந்து விளையாட்டாளர் சாய்னா நேவால் ஆகியோர் இதற்கு முன் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்.