Home Featured நாடு “இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!

“இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!

681
0
SHARE
Ad

mohan t -mic vp

கோலாலம்பூர் – இந்திய  சமுதாயத்தை  குறி வைத்து சமீப  காலமாக  சிலாங்கூர் பக்கத்தான்  அரசாங்கம் அடக்குமுறைகளை  கையாண்டு  வருவது  கண்டனத்திற்குரியது என்றும்,  இந்தியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின்  வாக்குகளால்  ஆட்சிக்கு  வந்தவர்கள், இன்று   அதனை மறந்து  விட்டு   கொடுத்த  வாக்குறுதிகளை மீறி  தொடர்ந்து  இந்தியர்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்காமல், தொல்லைகள்  கொடுத்து  வருவதும் நல்லதல்ல என்றும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார்.

இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கை ஒன்றில் “சிலாங்கூர்  மாநில  மந்திரி பெசார்  அஸ்மின்  அலி  இந்தியர்களின் குரல்வளையை  நெறிக்கும்  வண்ணம்  நடந்து  கொள்ளவதும் நல்லதல்ல” என்றும் அவர் தனது  கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆலய உடைப்பை முன் வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள்”

“தேசிய  முன்னணி  ஆட்சிக் காலத்தில்  பாடாங்  ஜாவா  ஆலயம்  உடைக்கப்பட்டதன்  தொடர்பில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமான  இந்தியர்கள் பக்கத்தான்  அரசாங்கத்திற்கு  ஆதரவு கொடுத்ததன் காரணமாகவே  சிலாங்கூர்  மாநிலத்தை  எதிர்கட்சி பிடிக்க  நேரிட்டது. எங்களது  ஆட்சிக்காலத்தில்  ஆலயங்கள்   உடைக்கப்பட மாட்டாது, இந்தியர்களின்  பொருளாதாரத்தை  உயர்த்துவோம்  என மார்தட்டி வெற்று  வாக்குறுதிகளை  அள்ளி வீசியவர்கள் இன்று சிலாங்கூர் மாநிலத்தில்  இந்திய சமுதாயத்தை  மையப்படுத்தி 10-க்கும்  மேற்பட்ட  ஆலயங்களை உடைத்து  தள்ளியது  ஏன்? இந்தியர்களின் கடைகளை உடைத்தது  ஏன்?  இரவுச்சந்தைகள்  முதல் அனைத்திலும் இந்தியர்களுக்கு  வாய்ப்புகள்  மறுக்கப்படுவது  ஏன்?  இந்திய சமுதாய  மேம்பாட்டிற்காக  சிலாங்கூர்  பக்கத்தான்  அரசாங்கம் செய்த  சாதனை  தான் என்ன?” எனவும் மோகன் வரிசையாக சிலாங்கூர் அரசாங்கத்தை நோக்கிக் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார்.

Mohan Tசில தினங்களுக்கு  முன்  சிப்பாங்  சுங்கை பீலேக் நாகமாரியம்மன்  ஆலயத்தை  உடைத்து தரைமட்டமாக்க நகராண்மைக்கழக   அதிகாரிகள் முற்பட்டு  ஆலயத்தின் ஒரு பகுதியை  உடைத்த வேளையில், பொதுமக்களோடு  மஇகா மத்திய  செயலவை  உறுப்பினரும், சிப்பாங் மஇகா தொகுதி  தலைவருமான வே.குணாளன் தலையிட்டு  ஆலயத்தின்   சிலைகள் உடைபடாமல்  தடுத்துள்ளார்.

அது மட்டுமில்லாது சுங்கை  பீலேக்  சட்டமன்ற  உறுப்பினரின்  அனுமதியோடு  இந்த  ஆலய உடைப்பு நிகழ்ந்துள்ளது வருத்தம்  அளிக்கிறது என்றும்,  இதே  வட்டாரத்தில் கம்போங்  புலா மெராந்தியில்  ஓர் ஆலயம் பேச்சுவார்த்தையின்  அடிப்படையில்  உடைபடாமல் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“மரத்தடி ஆலயங்கள்தான் மாபெரும் ஆலயங்களாக உருவெடுத்தன”

“மலேசிய  திருநாட்டில் பெரும்பாலும்   இந்து ஆலயங்கள் மரத்தடி  ஆலயங்களாகவும், ஆங்காங்கேயும் அமைந்து  பின்னர் நிலம்  வழங்கப்பட்டு பொது ஆலயங்களாக உருவாகி  உள்ள வரலாற்றை  யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. ஆகவே மாற்று இடத்திற்கு  வழிகோணாமல்  அராஜகமான  முறையில் ஆலயங்களை  உடைப்பது இந்தியர்கள் மீது அக்கறையில்லாத  நிலைப்பாட்டை  வெளிப்படுத்துகிறது. மேலும் நேற்று  கிள்ளான்  பெர்க்லி  கார்னர் உணவகத்தை 2 வது  முறையாக  உடைக்கும் நோக்கத்திலும், அந்தக்கடையை  காலி செய்யும்   நோக்கத்தோடும்  மிகவும் மோசமான  முறையில்  லோரிகளில் இந்தக்கடையின்  பொருள்களை எல்லாம்   ஏற்றியுள்ளார்கள். இதனை தடுக்க முயன்ற மஇகா இளைஞர்  பகுதி  செயலாளர்  அர்விந்த் கிருஷ்ணன் மற்றும்  பொதுமக்களோடு    வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியர்கள்  வணிகம்  செய்கிறார்கள்  என்ற  நிலைப்பாட்டில்  இந்தக் கடையை  காலி செய்ய  நினைக்கிறார்களா?” என்றும் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த  2014 ஆம் வருடம் டிசம்பர்  மாதம்  11-ம் தேதி  விடியற்காலையில்  இதே  கடையை உடைக்க முற்பட்ட  சம்பவம்  இந்தியர்களிடையே  பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது என்பதையும் மோகன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அரசியலுக்கு அப்பாற்பட்டு  பக்கத்தான்  இந்தியத் தலைவர்கள்  இந்தியர்கள்  என்ற உணர்வைத் தாங்கி  குரல் கொடுக்க முன் வர  வேண்டும்.  மேலும்  மஇகாவையும், அதன்  நிறுவனங்களையும்  குறை  சொல்லி  அரசியல்  பிழைப்பு நடத்தும்  ஒரு  சில  எதிர்கட்சி  இந்தியத் தலைவர்கள்,  இந்தியர்களின்  மீது  தொடுக்கப்படும் இது போன்ற அராஜகங்களை  கண்டுகொள்ளாமல்  இருப்பது  ஏன்?” என்றும் எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களை நோக்கி கேட்டிருக்கும்மோகன், “மஇகாவைப்  பொறுத்த  வரையில்  சமுதாயத்தின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும், அன்றைய  காலம்  தொட்டு இன்று  வரை குரல் கொடுத்து வருகிறது. சிலாங்கூர்  அரசாங்கத்தின்  அராஜகங்கள் தொடர்ந்தால்  மிகப்பெரிய அளவில்  போராட்டம்  வெடிக்கும்”  எனவும்  டி.மோகன் தமதறிக்கையில்  எச்சரித்துள்ளார்.