கோலாலம்பூர் – செலாயாங் – கெப்போங் நெடுஞ்சாலை அருகே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
‘ஓப்ஸ் சண்டாஸ் ஹாஸ் 2’ நடவடிக்கையின் படி, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், வந்த கார் ஒன்றைத் தடுத்த நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அதிலிருந்தவர்கள் காரை நிறுத்தாமல் தொடர்ந்து தடுப்பை மீறி வேகமாகச் செல்லவே, அவர்களைத் துரத்திக் கொண்டு சென்ற காவல்துறை வாகனம் செலாயாங் – கெப்போங் நெடுஞ்சாலையில், மலேசியக் காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Forest Research Institute of Malaysia) அருகே துரத்திப் பிடித்துள்ளது.
எனினும், அதிலிருந்த இருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் திரும்பச் சுட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மோதலில், சந்தேக நபர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் சடலமும் கோலாலம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகளையும், 11 பாக்கெட்டுகள் போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.