ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அமெரிக்காவின் ஆதிக்கமும், பதக்க வேட்டையும் முன்பை விடத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதுவரை 103 பதக்கங்களைப் பெற்று அந்நாடு முன்னிலை வகிக்கின்றது.
இதில் 37 தங்கப் பதக்கங்களும் அடக்கம்.
அடுத்து அமெரிக்காவைப் பின்தொடர்ந்து வந்த சீனாவை முந்திக் கொண்டு பிரிட்டன் பதக்கப் பட்டியலில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகின்றது. 24 தங்கங்களோடு 58 பதக்கங்களை பிரிட்டன் பெற்றுள்ளது.
மூன்றாவது நிலையில் இருக்கும் சீனா இதுவரை 22 தங்கம் உள்ளிட்ட, 65 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
எந்த நாடு அதிக தங்கம் பெறுகிறதோ அந்த நாடுதான் முதல் நிலை என்ற நடைமுறை ஒலிம்பிக்சில் கடைப்பிபிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் பிரிட்டனை விட கூடுதல் பதக்கம் பெற்றாலும், அதிக தங்கம் பெற்ற நாடு என்ற வகையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே மிகச் சிறந்த சாதனையை மலேசியாவும் அடைந்துள்ளது. 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களைப் பெற்று மலேசியா 57-வது இடத்தைப் பிடித்துள்ளது.
207 நாடுகள் பங்கு பெறும் போட்டியில், பலமான குழுக்களுக்கிடையில் 57-வது இடத்தைப் பிடிப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்தான்.
இன்று நடைபெறும் பூப்பந்து போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் லீ சோங் வெய் தங்கம் வென்றால் மலேசியாவின் தர வரிசை மேலும் உயரக்கூடும்.