கோலாலம்பூர் – விகடகவி மகேன் தயாரிப்பில், மலேசியாவின் இளம் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில், நடிப்பில் உருவாகியுள்ளள ‘கீதையின் ராதை’ திரைப்படம், வரும் செப்டம்பர் 22-ம் தேதி, நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி பிரிக்பீல்ட்ஸ் என்யு செண்டரலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், மலேசிய இந்தியத் திரைப்படம் மற்றும் கலைஞர்கள் இயக்கத்தின் தலைவர் டத்தோ கீதாஞ்சலி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், ‘கீதையின் ராதை’ திரைப்படத்தின் இசைக் குறுந்தட்டு வெளியீடு கண்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில், மலேசியாவின் முன்னணிக் கலைஞர்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாடல்கள்
‘கீதையின் ராதை’ திரைப்படத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில், விளம்பரங்களையும் தாண்டி அதில் உள்ள ஐந்து பாடல்கள், முக்கியப் பங்காற்றியுள்ளது. அந்த அளவிற்கு அதிலுள்ள இசையின் தரம் அனைத்துலக அளவில், அனைத்துத் தரப்பினரையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும் வகையில் உள்ளது.
இளம் இசையமைப்பாளர் ஷித்தீஷ் இசையில், கவிநாயகன் யுவாஜியின் வரிகளில், ‘மெல்லிசையே’, ‘ உன் குரல்’, ‘உன் விழியில் பார்க்கிறேன்’, ‘என்னைக் கொல்லாதே’ என நான்கு பாடல்கள் திரைப்படத்தில் திரைக்கதையோடு இணைந்து வரும் பாடல்களாகும். அவை தற்போது மலேசிய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடல்களாகத் திகழ்ந்து வருகின்றது. குமரேஷ் கமலக் கண்ணன், கேஷ்லினி, ஜெகதீசன், சிந்தி ஹாசினி, ஸமிதா, சுவர்ணா, மெரோஷனா மற்றும் பலர் அப்பாடல்களைப் பாடியுள்ளனர்.
மேலும் ஒரு பாடல் ‘தீம் சாங்’ என்பதன் அடிப்படையில், மெரோஷனா தயாளன், குயின், மகேந்திரன் ராமன், குமரேஷ், ஷித்தீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜங்லீ மியூசிக் (Junglee Music) நிறுவனம் இத்திரைப்படத்தின் இசையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகின்றது.
இசைத்துறையில் பட்டப் படிப்பு மேற்கொண்டிருக்கும் ஷித்தீஷ், இயக்குநர் ஷாலினியுடனான நட்பு குறித்தும், ‘கீதையின் ராதை’ படத்திற்கு அவர் தன்னை இசையமைக்கக் கேட்டுக் கொண்டது குறித்த அனுபவங்களை விழா மேடையில் பகிர்ந்து கொண்டார்.
அதேவேளையில், தனது பாடல்களுக்கு இரவு பகல் பாராமல் காத்திருந்து, அதற்கு ஏற்ப பாடல் வரிகள் எழுதித் தந்த கவிஞர் யுவாஜிக்கும், அதனைப் பாடிய பாடகர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பாடல்கள் எழுதியது குறித்து யுவாஜி பேசுகையில், இன்றைய காலத்தில் மக்களின் ரசனைக்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் வகையில் பாடல் வரிகள் எழுதியதாகத் தெரிவித்தார். சில பாடல்கள் ஷித்தீஷ் இசையமைத்துக் கொடுக்கக் கொடுக்க, அவ்விடத்திலேயே வரிகள் புனைந்ததாகத் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போதைய சூழ்நிலையில், எத்தனையோ திறமையான மலேசியக் கலைஞர்கள் புதிய படைப்புகளைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது படைப்புகளை வெளியிடத் தேவையான அலைவரிகளின் பற்றாக்குறை குறித்து யுவாஜி தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
மேலும், ஆர்.டி.எம்மில், வார நாட்களின் பிற்பகலில் இடம்பெறும் தமிழ் நாடகங்களை எல்லோரும் பார்க்கும் வகையில், அதன் நேரத்தை சற்று மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும் படியும், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திடம் கோரிக்கை வைத்தார்.
தயாரிப்பாளர் உரை
அஸ்ட்ரோ தொகுப்பாளராக இருந்து, பின்னர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து, தற்போது கீதையின் ராதை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள விகடகவி மகேன் பேசுகையில், ஷாலினியின் திறமையையும், சினிமா மீதான ஆர்வத்தையும் அவர் சிறுவயதாக இருக்கும் போதிலிருந்தே தான் பார்த்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட ஒரு திறமையான இளம் கலைஞருக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கிலும், அவர் மூலமாக அவரது குழுவிலுள்ள பல திறமையான கலைஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தான் இத்திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்ததாக மகேன் தெரிவித்தார். அதனால் தான் இத்திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
பாடல் காட்சிகள்
முறையான நேரத்தில் நிகழ்ச்சி தொடக்கம், ‘கபாலி’ புகழ் அருண் குமாரின் கலகலப்பான நிகழ்ச்சி வழிநடத்தல், ‘கீதையின் ராதை’ குழுவினரின் தெளிவான, தடுமாற்றமில்லாத உரை, வந்திருந்த முக்கியப் பிரமுகர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கியது என மிகவும் நேர்த்தியாகவும், புதுமையாகவும் நடைபெற்ற இவ்விழாவில், முக்கிய அம்சமாக அரங்கிலிருந்த பார்வையாளர்களை மகிழ்விக்க இடையிடையே ஒளிபரப்பப்பட்ட ‘கீதையின் ராதை’ பாடல் காட்சிகள் அனைவரையும் மிகவும் உற்சாகப்படுத்தியது.
சத்தீஷ் நடராஜனின் ஒளிப்பதிவில், படத்தொகுப்பில் ‘கீதையின் ராதை’ திரைப்படம் எவ்வளவு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதற்குச் சான்றாக, அப்பாடல் காட்சிகள் வண்ணமயமாக அமைந்திருந்தன.
கதாநாயகன் ஜிகிராக் கர்ணனின் அசத்தலான முகபாவணைகளும், கதாநாயகி ஷாலினியின் துள்ளலான நடிப்பும், இளைஞர்களை வசீகரிக்கும் நடன அசைவுகளும் எல்லாமுமாக சேர்ந்து ‘கீதையின் ராதை’ திரைப்படத்தின் மீதான நம்பிக்கையை மிக ஆழமாக விதைத்துள்ளன.
இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலேசியத் திரைப்படங்களில் ‘கீதையின் ராதை’ -யும் ஒன்று. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, மலேசியத் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ள இத்திரைப்படம், மலேசிய ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இத்திரைப்படத்தின் பாடல்காட்சிகளைக் கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்து அதன் வழி ‘கீதையின் ராதை’ பேஸ்புக் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
https://www.facebook.com/geethaiyinraadhaimovie/?fref=ts
படங்கள்: மோகன்ராஜ் வில்லவன், கீதையின் ராதை பேஸ்புக்