கோலாலம்பூர் – விகடகவி புரோடக்சன்ஸ் தயாரிப்பில், இளம் இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கி நடித்துள்ள, ‘கீதையின் ராதை’ திரைப்படம் நாளை செப்டம்பர் 22-ம் தேதி முதல் நாடெங்கிலும் வெளியாகவுள்ளது.
முற்றிலும் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், இன்றைய நவீன காலத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதை நடக்கும் சூழல், கதாப்பாத்திரங்களில் தேர்வு, மனதை வருடும் பாடல்கள், வண்ணமயமான ஒளிப்பதிவு என காட்சிக்குக் காட்சி சுவாரசியத்தைக் கூட்டியிருக்கும் இந்த ஆர்ப்பாட்டமான காதல் பயணத்தைக் காண இப்போதே மலேசிய இளைஞர்கள் மத்தியில் கொண்டாட்ட மனநிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
கடந்த வாரம் சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்காக ‘கீதையின் ராதை’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
அதனைக் கண்ட பலரும் இத்திரைப்படத்தின் தரத்தினைக் கண்டு வியந்ததோடு, படக்குழுவினரை மிகவும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், இத்திரைப்படத்தில் பார்த்து ரசிக்க என்னென்ன விசயங்கள் உள்ளன என்பதற்கான சுவாரசியமான தகவல்கள் இதோ:
கதை
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கதை.. கல்லூரிப் பருவத்தில் நடக்கும் காதல் கதை.. மலாக்காவிலிருந்து கோலாலம்பூருக்கு படிப்பதற்காக வரும் இளம் பெண்ணான ஆர்த்தி, தனது படிப்போடு சேர்த்து தனது எதிர்காலக் காதலனையும் சந்திக்கும் கனவோடு வருகின்றார்.
தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப் போகும் ஆண், இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே வைத்திருக்கும் ஆர்த்தி, தனது மனதிற்குப் பிடித்த ஒருவனைச் சந்தித்த பிறகு, நடைமுறை வாழ்க்கையில் அவள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளும், தீர்வுகளும் தான் படத்தின் சுவாரசியம்.
ஆர்த்தி, அஜய்
ஆர்த்தியாக ஷாலினியும், அஜயாக ஜி கிராக் கர்ணனும் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தில் இருவருக்குமான ஜோடிப் பொருத்தம் மிகச் சிறப்பாக இருக்கின்றது. துறுதுறுவென வெகுளித்தனமான பேச்சுடன் ஷாலினி தனது நடிப்பால் கவர்கிறார் என்றால், கர்ணன் தனது இயல்பான நடிப்பால், முகபாவணைகளால், கண்களால் மிகவும் ஈர்க்கிறார். மலேசியாவுக்குக் கிடைத்திருக்கும் நவரச நாயகனாக காதல், கோபம், அழுகை என தனது தனித்துவமான நடிப்பால் அசர வைத்திருக்கிறார். நிச்சயமான கர்ணனுக்கு மலேசிய திரையுலகில் மிகச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.
படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும், இந்த ஜோடியின் காதல் காட்சிகளும், டாம் அண்ட் ஜெர்ரியாக சண்டையிடும் காட்சிகளும் இரண்டு நாட்களுக்கு மனதைவிட்டு நீங்காது.
விக்ரான்
படம் தொடங்கியது முதல் முடிவு வரை ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும் கதாப்பாத்திரம். தமிழ்ப் பற்றாளராக, பாடகராக இருந்தவர், அப்படியே நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
படத்தில் சீரியசாக நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகளுக்கு நடுவே இவர் அடிக்கும் ஒற்றை ஜோக் ரசிகர்களை அச்சூழலை மறந்து ரசிக்க வைக்கின்றது.
மிக எதார்த்தமான நடிப்பு, பேசும் வசனங்கள், உடல்மொழி இம்மூன்றும் கர்ணனின் நண்பராக வரும் விக்ரானை மிகவும் தனித்துவமாகக் காட்டுகிறது.
உதாரணமாக, “மச்சான்.. மத்த நாட்டுல எப்படியோ தெரியல.. ஆனா நம்ம நாட்டுல தான் ரோட்டுக்கு நாலு பிரின்சஸ் இருக்காளுங்க” – இப்படியாக விக்ரான் பேசும் வசனங்கள் மெய்மறந்து ரசிக்க வைக்கின்றது.
மற்ற கதாப்பாத்திரங்கள்
படத்தில் கதாநாயகன், கதாநாயகியோடு மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவர்களும் கதையோடு பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியின் தந்தையாக மூத்த நடிகர் கேஎஸ்.மணியம், காதலனின் தந்தையாக நடிகர் குணசேகரன், அண்ணனாக இசையமைப்பாளர் பாலன்ராஜ், தோழியாக திவானியா, சுவர்ணா, கல்லூரித் தோழனாக கண்ணன் ராஜமாணிக்கம், உறவினராக நடிகர் ஷான் எனப் படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பல கதாப்பாத்திரங்களும், அவர்களின் குணாதிசியங்களும், அதை அவர்கள் வெளிப்படுத்திய விதமும் ரசிகர்களைக் கவரும் வகையிலேயே உருவாக்கியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஷாலினி.
ஒளிப்பதிவு, இசை
தமிழ்நாட்டிலிருந்து வரும் திரைப்படங்களுக்கு நிகராக, படம் முழுவதும் வண்ணமயமாக மிகப் பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சதீஸ் நடராஜன். படம் பார்க்கும் ரசிகர்கள் கதையினூடே பயணிக்கும் வகையில் தொடக்கம் முதல் முடிவு வரை எங்குமே தொய்வின்றி ரசிகர்களுக்கு மாறுபட்ட திரையரங்கு அனுபவத்தைக் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்தியிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு பக்கபலம் சேர்த்திருப்பதில் இசை முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஷித்தீஷ் இசையில், கவிநாயகன் யுவாஜியின் வரிகளில், ‘மெல்லிசையே’, ‘ உன் குரல்’, ‘உன் விழியில் பார்க்கிறேன்’, ‘என்னைக் கொல்லாதே’ என நான்கு பாடல்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
அப்பாடல்களை ரசிக்கும் படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதிலும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
பாடல்களில் இடம்பெறும் மிக அழகான நடன அசைவுகளை அமைத்திருப்பவர் கிஷன் ஜெய். குறிப்பாக, ‘உன் குரல்’ பாடல் காட்சிகளில் வரும் நடன அசைவுகள் துள்ளிக் குதிக்க வைக்கின்றது.
இப்பாடல்களுக்காகவும், காட்சிகளுக்காகவுமே படத்தைப் பார்க்கும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக புரிந்து வைத்துள்ள இயக்குநர் ஷாலினி, அதற்கேற்ப கதையை உருவாக்கி, அதை காட்சிகளாக்கி வெற்றியடைந்திருக்கிறார்.
நாளை செப்டம்பர் 22-ம் தேதி முதல் மலேசியா முழுவதும் 25 திரையரங்குகளுக்கும் மேல் வெளியீடு காணவுள்ள, ‘கீதையின் ராதை’ – தவறாமல் பார்க்க வேண்டிய நவீன காதல் கவிதை!
– ஃபீனிக்ஸ்தாசன்