Home Featured தொழில் நுட்பம் நியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது!

நியூகட்: ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியீடு கண்டது!

1138
0
SHARE
Ad

(கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை ‘நியூகட்’ வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி செல்லினம்.காம் இணையத் தளத்தில் இடம் பெற்ற இந்த கட்டுரையை செல்லியல் வாசகர்களின் பயன்பாட்டுக்காக  மறு பதிவேற்றமாக வெளியிடுகின்றோம்)

ஆண்டிராய்டின் ஏழாம் பதிகை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ‘நியூகட்’ (அல்லது நியூகா –Nougat) எனும் இனிப்பின் பெயர், ஜூன் மாதம் சூட்டப்பட்டது.

sellinam-naughat-

#TamilSchoolmychoice

ஆண்டுதோறும் புதிய ஆண்டிராய்டு பதிகைகள் வெளிவருவது வழக்கம்தான். ஆனால், இவ்வாண்டின் வெள்ளோட்டம் சற்று முன்கூட்டியே தொடங்கிவிட்டது. மார்ச்சு மாதம் முதல் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் இதன் கட்டமைப்பை ஆராய்ந்து வந்தனர். மேலும், புதிய நெக்சஸ் கருவிகள் ஏதுமில்லாமல், ஆண்டிராய்டு மட்டுமே வெளியிடப்படுவதும் வழக்கத்திற்கு மாறான ஒன்றே!

நியூகட், 250க்கும் மேற்பட்ட முதன்மையான வசதிகளைக் கொண்டு வருவதாக கூகுள் அறிவித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை மட்டும் காண்போம்.

விரிவாக்கப்பட்ட ‘இமோஜி’ குறியீடுகள்

இமோஜி எனப்படும் உணர்ச்சிக் குறியீடுகளின் எண்ணிக்கையும் தன்மையும் கூட்டப்பட்டுள்ளன. ஐ.ஓ.எசில் உள்ளது போலவே, சில குறியீடுகளுக்கு நிறவேறுபாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், தற்போது 1,500க்கும் மேற்பட்ட குறியீடுகள் உள்ளதாகவும், அவற்றுள் 72 புதியன எனவும் கூகுள் கூறுகிறது.

sellinam-naughat-New_Emoji

பன்மொழிப் பயன்பாடு

மொழிகளின் சேர்க்கை ஆண்டிராய்டில் தாமதமாகத் தொடங்கியது. ஆனால் விரைவாக முன்னேறி வருகிறது. தமிழ் எழுத்துருவையும் உள்ளிடுமுறையையும் ஐ.ஓ.எஸ் தான் முதலில் சேர்த்தது. ஆனால் ஆண்டிராய்டுதான் தமிழை முழுமையான பயன்பாட்டு மொழியாகத் தந்தது. நூகாட் பதிகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை ஒரே நேரத்தில் புழங்கும் வாய்ப்பு பலராலும் வரவேற்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரு செயலிகள்

சாம்சங் வெளியிடும் சில ஆண்டிராய்டு கருவிகளில் ஒரே நேரத்தில் இருசெயலிகளை இயக்குவதற்கான வாய்ப்பினைத் தந்தது. ஆப்பிள் வெளியிட்ட ஐ-பேட் புரோவிலும் கூட இந்த வசதி சேர்க்கப்பட்டது. மற்ற திறன்பேசிகளில் இந்தத் தன்மை இருந்ததாகத் தெரியவில்லை. இந்த வசதி, தட்டைகளிலேயே (tablets) அதிகம் பயன்படும். என்றாலும், எல்லா கருவிகளிலும் இயங்கும் வண்ணம் நியூகட்டில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. பெரிய திரைகளைக் கொண்டுள்ள திறன்பேசிகளிலும், இதன் பயன்பாடு அதிகரித்து வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

sellinam-naughat-screenshot-main page

sellinam-android-naughat-screen shot

 

ஒரே திரையில் இரு செயலிகள்                           விருப்ப மொழிகளைத்                                                                                                                                        தேர்ந்தெடுக்கும் திரை

பட்டரி செமிப்பு

கடந்த மார்சுமெலோ பதிகையிலேயே பட்டரியை சேமிப்பதற்கான நுட்பங்களை கூகுள் அறிமுகப்படுத்தியது. திரை, அணைந்த நிலையில் இருக்கும்போதும், கருவி நகரா நிலையில் இருக்கும்போதும், பட்டரியின் பயன்பாடு குறைக்கப்பட்டது. நியூகட்டின் நுட்பம், சட்டைப் பையில் இருக்கும்போதும் பயன்பாடற்ற நிலையை உணர்ந்து பட்டரி சேமிப்பைத் தொடங்கிவிடும். இருப்பினும், பட்டரி தேய்மானம் வெறும் பயன்பாட்டினால் மட்டும் ஏற்படுவதல்ல. தட்பவெப்பம், சமிக்ஞை வலிமை போன்ற மற்றக் கூறுகளும் தேய்மானத்தைப் பாதிக்கும்.

நியூகட் பதிகையில் செல்லினம்

கடந்த சில மாதங்களாகவே, நியூகட்டின் வெள்ளோட்டப் பதிகையில் செல்லினத்தை பயன்படுத்தி வருகின்றோம். எந்தவித மாற்றங்களும் இல்லாமல் சிறப்பாகவே இயங்கிவருகிறது. ஒரே திரையில் இரு செயலிகள் இயங்கும்போதும், செல்லினம் தமிழ் உள்ளீட்டை சரிவரச் செய்து வருகிறது. எனவே பயனர்கள் தயங்காமல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

எப்போது கிடைக்கும்?

ஆப்பிளின் ஐ.ஓ.எசைப்போல், வெளிவந்த மறுநொடியே ஆண்டிராய்டு நமது கருவிகளுக்கு வருவதில்லை. முதலில் கூகுளின் நெக்சாஸ் கருவிகளுக்கே வந்து சேரும். அதன்பின் அந்தந்த உற்பத்தி நிறுவனங்களைப் பொருத்தது. சிலர் விரைவாக வெளியிடுவர். சிலர் நாள்கடந்து வெளியிடுவர். இன்னும் சிலர் புதிய கருவிகளில் மட்டுமே அதனை கொண்டுவருவர். எனினும், தைவானில் இருக்கும் எச்.டி.சி நிறுவனம், தங்களின் M10, M9, A9 ஆகிய கருவிகளுக்கு நியூகட் மேம்பாடு கிடைக்கும் என்று உடனே அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நமது கைகளில் இந்த இனிப்பு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்!

-நன்றி : செல்லினம்