Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: குற்றமே தண்டனை – மிக எதார்த்தமான கதை; எதிர்பாராத திருப்பம்!

திரைவிமர்சனம்: குற்றமே தண்டனை – மிக எதார்த்தமான கதை; எதிர்பாராத திருப்பம்!

841
0
SHARE
Ad

1234கோலாலம்பூர் – ஒரு கொலைக் குற்றம், அக்குற்றம் நடக்கக் காரணமாக இருந்த சூழ்நிலை, அக்குற்றத்தை நீதியின் பார்வையில் இருந்து மறைக்க நடக்கும் போராட்டம், தண்டனை வழங்கியது நீதியா? மனசாட்சியா? இது தான் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில், விதார்த், ஐஸ்வர்யா ராஜேஸ், ரகுமான் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படத்தின் மையக்கரு.

சினிமாவுக்கான அலங்காரங்கள் இல்லாமல் ஏதோ பக்கத்து வீட்டில் நடப்பது போல் காட்சியமைப்புகளும், கதை சொன்ன விதமும் தான் இப்படத்தின் மிகப் பெரிய பலம். படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அதனுடன் பயணிக்கத் தொடங்கிவிடுகின்றோம். பாலுமகேந்திரா படத்தைப் பார்க்கும் போது ஏற்படும் மனநிலையைப் பெற்று விடுகின்றோம்.

விதார்த் ஜன்னல் வழியே பார்க்கும் போதெல்லாம், ஏதோ குழாயின் வழியாகப் பார்ப்பதாகத் தெரிகின்றதே? என்ன அது? என்று ஒரு சில நிமிடங்கள் படம் பார்க்கும் ரசிகனை பல வகையில் யோசிக்க இடைவெளி கொடுத்து, அதன் பின்னர் அதற்கான காரணத்தை சொன்ன விதம் மிகவும் ரசிக்க வைக்கின்றது. (அது என்னவென்று இங்கே சொல்ல முடியாது. அந்த சுவாரசியத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும் அல்லவா?)

#TamilSchoolmychoice

அதற்கு ஏற்ப விதார்த்தும் அக்கதாப்பாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு பொருளையும் அவர் பார்க்கும் விதம், அதற்கான உடல்மொழி, நடிப்பு ஆகியவற்றில், படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பது தெரிகின்றது.

அதோடு, நாசருக்கும், விதார்த்துக்குமான காட்சிகளை வைத்து, விதார்த்தின் மனசாட்சி பேச வேண்டிய காட்சிகளையெல்லாம் நாசர் மூலமாகப் பேச வைத்து, சுவாரசியத்தைக் கூட்டியிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று. உதாரணமாக, “காசு குடுத்துட்டானா? அப்ப அவன் தான் கொலை பண்ணிருப்பான்”, “எது தேவையோ அதுவே தர்மம்” இப்படியாகப் பல வசனங்கள் ரசனைக்கான இடங்கள்.

ரகுமான்.. இன்னும் அதே இளமையோடு பளிச்சென இருக்கிறார். விதார்த்திடம் முதலில் பணிந்து, பின்பு எகிறும் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

எப்போதும் கிராமத்துப் பெண்ணாகவே பார்த்த ஐஸ்வர்யா ராஜேசை மார்டன் பெண்ணாகவும், ‘இறைவி’ படத்தில் மார்டன் பெண்ணாகப் பார்த்த பூஜா தேவாரியாவை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் காட்டியிருப்பது ரசிக்க வைக்கின்றது. பூஜா தேவாரியா அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏகப் பொருத்தம். குளோசப் காட்சிகளில் மிகவும் கவர்ந்திழுக்கிறார்.

விதார்த்தின் செயல்பாடுகளில் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கும் இயக்குநர், கொலையாளியைக் கண்டறியும் காவல்துறை விசாரணையிலும் விறுவிறுப்பைச் சேர்த்திருந்தால், திரைக்கதை இரண்டு பக்கத்திலும் சமநிலையடைந்திருக்கும்.

எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் காவல்துறையின் விசாரணை மெல்ல நகர்வது படம் பார்க்கும் ரசிகனை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வரத் தவறிவிட்டது. அதேபோல், பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது.

என்றாலும், கதையினூடே பார்வைக் குறைபாடுள்ளவர்களின் வலி, கண் அறுவைச் சிகிச்சை மையங்களில் நடக்கும் ஊழல், கண் தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஆகியவற்றைச் சொல்லிய இயக்குநர் மணிகண்டனுக்கு சபாஷ்.

குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ்  திருப்பமும், கருத்தும் மிகவும் அருமை.

இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருப்பதால், தனது மனதில் உள்ள கதையைக் காட்சிப்படுத்துவதில் அவருக்கு சிக்கலின்றி மிகவும் எளிதாக இருந்திருக்கிறது. அழுக்குச் சுவற்றில் இருந்து, அடுக்குமாடி குடியிருப்பு வரை அனைத்திலும் எதார்த்தம் நிறைந்து காணப்படுகின்றது. இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு இன்னொரு பலம்.

மொத்தத்தில், இப்படம் தொலைக்காட்சிக்கு வரும் வரையில் காத்திருக்க முடியாது என்றால், தாராளமாக திரையரங்கிற்குச் சென்று பார்த்து ரசிக்கலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்