ஜகார்த்தா – இந்தோனிசியப் பாதுகாப்புப் படை, தீவிரவாத இயக்கம் ஒன்றின் உயர்மட்டத் தலைவனை, அதிரடியாகச் சிறைப் பிடித்துள்ளதோடு, அதே இயக்கத்தைச் சேர்ந்த மற்றொருவனைக் கொன்றுள்ளது.
கிழக்கு இந்தோனிசிய முஜாஹிதீனைச் சேர்ந்த முகமட் பஸ்ரி என்ற அத்தலைவனை மத்திய சுலாவெசியிலுள்ள போசோ என்ற கடற்கரை நகரில் வைத்து, இந்தோனிசிய இராணுவம் சிறைப் பிடித்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறைப் பேச்சாளர் பாய் ரஃப்லி அமர் தெரிவித்துள்ளார்.
“அவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யவிடாமல் எதிர்த்ததால், அவன் கொல்லப்பட்டான்” என்று அமர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பஸ்ரி கைதானது அந்த இயக்கத்தை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்றும், காரணம் அந்த இயக்கத்திற்கு அவன் தான் முக்கியத் தலைவனாக இருந்தான் என்றும் அந்நாட்டு தேசியக் காவல்படைத் தலைவர் டிடோ கர்னாவியான் தெரிவித்துள்ளார்.