மும்பை – இந்தியாவின் புகழ்பெற்ற முதன்மையான பொறியியல், தொழில் நுட்பக் கல்வி மையங்களில் ஒன்றான மும்பை ஐஐடி பல்கலைக் கழகம் விடுத்த அழைப்புக்கிணங்க, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மலேசியாவின் குறிப்பிடத்தக்க கணினித் தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் அங்கு தனிப்பட்ட சிறப்புரை ஒன்றை வழங்கினார்.
முத்து நெடுமாறனின் உரை, தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்காசிய மொழிகளுக்கான எழுத்துரு உருவாக்கம் குறித்ததாக அமைந்திருந்தது. இந்த மொழிகளில் எழுத்துரு உருவாக்கம் அடைந்திருக்கும் நிலை, புதிய வடிவமைப்புகளில் ஏற்படும் சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள், ஒவ்வொரு மொழிக்கான எழுத்துருவாக்க முயற்சிகளில் கிடைக்கும் பட்டறிவு, அவற்றைக் கொண்டு மற்ற மொழிகளுக்கான எழுத்துருக்களை மேம்படுத்துவது தொடர்பான பல கருத்துகளை தனது உரையில் அவர் பகிர்ந்து கொண்டார்.
முத்து நெடுமாறனின் உரையை மும்பை ஐஐடியின் தொழில்துறை வடிவமைப்பு மையம் (Industrial Design Center (IDC)) ஏற்பாடு செய்திருந்தது. முத்து நெடுமாறனின் திறன்களையும்,அனுபவங்களையும் மும்பை ஐஐடியின் மாணவர்களும், விரிவுரையாளர்களும் கேட்டுப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயல்முறைக் காட்சிகளின் வழி, அரபு, வங்காளம், மியன்மார் மற்றும் தமிழ் மொழி எழுத்துகளைக் காட்டி அந்தந்த மொழிகளில் உள்ள சிறப்புக் கூறுகளை விளக்கினார் முத்து நெடுமாறன். ஒரு மொழியின் வரிவடிவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டிய அவர், அவற்றைக் கூர்மையாக கவனித்து, செப்பம் செய்வதன்வழி எழுத்துருவுக்கு எவ்வாறு அழகு சேர்க்கலாம் என்பதை தெளிவாக விளக்கினார்.
முத்து நெடுமாறனின் உரைக்குப் பின்னர் இடம் பெற்ற கேள்வி-பதில் அங்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்ப, அதற்கான பதில்களை அவர் வழங்க, மாணவர்களும், பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் பங்கு பெற்ற பயன்மிக்க, தகவல் பரிமாற்ற அரங்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
முத்து நெடுமாறன் முரசு, செல்லியல் நிறுவனங்களின் தோற்றுநர் என்பதோடு அவற்றின் தலைமைத் தொழில்நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.
அவரது வடிவமைப்பில் உருவான முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளை உலகம் முழுவதும் இலட்சக் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.