புத்ராஜெயா – தன்னுடைய கட்சிக்காரரைச் சந்திக்க தான் ஏன் அனுமதிக்கப்படவில்லை? என்பதை உள்துறை அமைச்சு விளக்கமளிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் புதிய அனைத்துலக வழக்கறிஞரான கிம்பெர்லி மோட்லி வலியுறுத்தியுள்ளார்.
சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை தான் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மலேசிய வழக்கறிஞர்கள் செய்ததாகவும், அதற்காகக் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியதாகவும் கிம்பெர்லி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அன்வாரைச் சந்திக்க வேண்டிய நிலையில், சிறைக்குச் சென்ற போது அங்கு, தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், முறையான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கிம்பர்லி மோட்லி தெரிவித்துள்ளார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதித்து, அவரது சம்பந்தப்பட்ட வழக்குகளில் இனி வழக்காட, அனைத்துலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க பெண் வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.