கோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் இரண்டாவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
வர்த்தக விழாவை மிகப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் நோக்கில் நாளை செப்டம்பர் 24-ம் தேதி, வித்தியாசமான முறையில் திடீர் நடன நிகழ்ச்சியொன்று (Flashmob) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 9.30 மணியளவில் கேஎல் செண்ட்ரல் கேடிஎம்-ல் தொடங்கவுள்ள தீடீர் நடன நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணியளவில் போர்ட் கிள்ளான் கேடிஎம்மில் நிறைவடைகின்றது.
இந்த நடன நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், ஸ்ரீ, சிவக்குமார், ஷாமினி, அலின்டா, ஷாஸ்தன், நதியா, அருணா, சுரேஸ் (விழுதுகள்), மதன், மீனா குமாரி, பாலா, ஐரிஸ், பானு மிதா, தினேஸ் ரூபன் மற்றும் எரா நடனக்குழுவினர் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.
கேடிஎம் பயணிகளுடன் பல வேடிக்கை விளையாட்டுகளை நடத்தவுள்ள இக்கலைஞர்கள், ஆடல், பாடலுடன் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவுள்ளனர்.
ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை, 3 நாட்களுக்கு, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெறவுள்ள இந்த வர்த்தக விழாவில் ஜவுளி, ஆபரணங்கள், தொலைத் தொடர்பு, இயற்கை வளம், சுற்றுலா, காப்புறுதி, தொழில்நுட்பம் எனப் பல தரப்பட்ட துறைகளைச் சார்ந்த முகப்புகள் இடம்பெறவுள்ளன.
கேடிஎம் போர்ட் கிள்ளான் இரயில் நிலையத்தில் இருந்து ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டிக்குச் செல்ல இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவே நாளை இந்த திடீர் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.