சென்னை – நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு மாறாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவர் குணமடைந்து விட்டாலும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும். அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் அவர் சார்பில் நேற்று விடுக்கப்பட்ட அறிவிப்பில் தேர்தலின் போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 50 இடங்களில் கட்டற்ற கம்பியில்லா இணையத் தொடர்பு (வைஃபை) சேவை ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஜெயலலிதா குணமடைய வேண்டுமென பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகள் விடுத்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ஜெயலலிதா குணமடைய வாழ்த்து தெரிவித்த வேளையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக தலைமையக வலைத்தளத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பு…
அதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் இராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தொடர்ந்து தமிழக முதல்வர் நலமடைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எப்போதும் கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தனது அறிக்கையில் “ஜெயலலிதா குணமடைந்து வருவது ஆறுதலான செய்தியாகும். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது நலம் விழைகிறோம். அரசியல் நிலைப்பாட்டில் வேறுபடுவது என்பது நமது கட்சிகளின் நயத்தக்க நாகரீகத்தை ஒருபோதும் பறித்து விடக்கூடாது என்பது முக்கியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.