சென்னை – கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் இணையதளங்கள், பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களின் வாயிலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அப்போலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நுரையீரல் தொற்று, இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பிரச்சினைகளினால் அவதிப்பட்டு ஜெயலலிதாவைக் கண்காணிக்க லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதோடு, மருத்துவமனையைச் சுற்றி கடுமையான பாதுகாப்பும், ஜெயலலிதா தங்கியிருக்கும், அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைய தீவிரக் கட்டுப்பாடும் பின்பற்றப்பட்டு வருகின்றது.