சென்னை – பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் (மலேசிய நேரப்படி சனிக்கிழமை இரவு 9.15 மணி) அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (படம்).
தமிழக ஆளுநரை வரவேற்ற அப்போல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறையில் ஆளுநர் அவரைச் சந்தித்ததாக, இந்த சந்திப்புக்குப் பின்னர் ஆளுநர் மாளிகை ராஜ்பவனிலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தன்னை அவர் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கியதற்காக அவர்களுக்கு தனது நன்றியைத்தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பதோடு, முதல்வர் நல்ல முறையில் குணமடைந்து வருகின்றார் என்பதை அறிந்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிறந்த மருத்துவ கவனிப்பும், சிகிச்சையும் வழங்கி வரும் மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கூடியவிரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட ஆளுநர், முதல்வருக்கு ஒரு கூடை பழங்களையும் வழங்கினார் என்றும் ராஜ்பவன் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆளுநர் வித்யாசாகரை மருத்துவமனையில் அதிமுக பிரமுகர்களும், அமைச்சர்களும் வரவேற்றனர். மக்களவையின் துணைத் தலைவர் டாக்டர் எம்.தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் பி ராமமோகன ராவ், தமிழக அரசின் ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதார அமைச்சின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநரின் வருகையின்போது உடனிருந்தனர் என்றும் ஆளுநர் மாளிகையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.