ஜோகூர்பாரு – நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநில அளவில், யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளியில் கொண்டாடப்பட்ட “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பிரதமர் துறையின் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்ட வரைவு இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் உரையாற்றினார்.
“தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்வியின் தரத்தையும்,நிலைமையும் உண்மையிலேயே மேம்படுத்த நினைக்கும்,அதற்காக கடப்பாடு கொண்ட பிரதமர் ஒருவர் நமக்குக் கிடைத்திருக்கின்றார். அவர் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சங்களை தமிழ்க்கல்வியில் நாம் எட்டியிருக்கின்றோம்” எனத் தனதுரையில் இராஜேந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.
இப்போது 530 தமிழ்ப் பள்ளிகள்
நாட்டின் வரலாற்றில் தமிழ்ப் பள்ளிகளை இழந்து வந்த காலம் மாறி தற்போது முதன்முறையாக புதிதாக 7 தமிழ்ப் பள்ளிகளைப் பெற்றிருக்கின்றோம் என்றும் அதன்மூலம் இப்போது 530 தமிழ்ப் பள்ளிகள் நாட்டில் உள்ளன என்றும் குறிப்பிட்ட இராஜேந்திரன், நான்கு புதிய தமிழ்ப் பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பள்ளிகளின் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழை வாழ வைப்பதற்கும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வியைக் கொண்டு செல்வதற்கும் நடைபெறும் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” போன்ற நிகழ்ச்சிகளையும், முயற்சிகளையும் பார்க்கும்போது தமிழ் மலேசியாவில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை பிறப்பதாகக் கூறினார்.
தனது உரையில் கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் இந்நாட்டில் தமிழ்க் கல்விக்கான அடித்தளத்தை அமைக்க மேற்கொண்ட முயற்சிகளையும், நடத்திய போராட்டங்களையும் நாம் மறந்து விடக் கூடாது என்று நினைவுறுத்திய இராஜேந்திரன்,அதனால்தான் இன்றுவரை தமிழ்க்கல்வி நாட்டில் செழித்து வருகின்றது என்றும் கூறினார்.
“தற்போதைய நிலைமை தொடரவும், வெற்றி பெறவும் தமிழ்ப் பள்ளிகளுக்கு நமது ஆதரவு தேவை. தரமான தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளிகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இனியும், தமிழ்ப் பள்ளிகளுக்கு நமது பிள்ளைகளை அனுப்புவதற்கு நாம் தயங்கக் கூடாது” என்றும் அவர் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார்.