புதுடெல்லி – ‘லெட்ஸ் டாக் அபவுட் ரேப்’ என்ற தலைப்பில், பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டு வரும் கட்டுரையில், இந்தியாவின் முக்கியப் பிரபலங்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைக் கடிதம் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
அதில், இந்தியாவின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கணையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான மேரிகோம், இளம் வயதில் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி கூறியிருப்பதோடு, பெண்களை மதிக்க வேண்டும் என்று தனது மகன்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.மேர்கோமின் மூத்த மகனுக்கு தற்போது 9 வயதாகிறது.
மேரிகோம் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“பாலியல் வல்லுறவு பற்றி பேசுவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பற்றிப் பேசுவோம். ஒவ்வொரு நாளும் பெண்கள், பின்தொடரப்பட்டு, பாலியல் தொந்தரவிற்கும், பாலியல் வல்லுறவிற்கும் ஆளாகிறார்கள். என்னுடைய குழந்தைகளாகிய உங்களுக்கு 9 வயதும், இளையவனுக்கு 3 வயதும் ஆகிறது. பெண்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதை கற்றுத் தரும் வயதாக இதனை நான் உணர்கிறேன்.”
“என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். உங்கள் தாயும் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியிருக்கிறார். முதல் முறையாக மணிப்பூரிலும், அதன் பின்னர் டெல்லியில் தனது தோழியுடன் போகும் போது, ஹரியானாவின் ஹிசாரிலும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். ஒரு முறை பயிற்சி முடித்து விட்டு இரவு 8.30 மணியளவில் சைக்கிள் ரிக்சாவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் சட்டென்று என் மீது பாய்ந்தார். எனது மார்புகளை கசக்கி விட்டு ஓடி விட்டார். நான் ரிக்சாவில் இருந்து இறங்கி அவனை விரட்டிக் கொண்டே ஓடினேன். ஒரு கையில் செருப்பையும் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அவன் தப்பி விட்டான். எனக்கு அவனை பிடிக்க முடியவில்லையே என கோபம் கோபமாக வந்தது. அப்போதுதான் நான் கராத்தே படித்திருந்தேன். கிடைத்திருந்தால் ஒரு கை பார்த்திருப்பேன்” என்று மேர்கோம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த சம்பவம் நடந்த போது எனக்கு வயது 17. இப்போது 33 வயதில் இருக்கிறேன். இப்போது நான் ஒலிம்பிக் மெடலிஸ்ட். இந்த நாட்டுக்கு புகழ் சேர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதில் ஒரு குறை இருக்கிறது. இந்த நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் என்னைப் போலவே மதிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.” என்றும் மேரிகோம் குறிப்பிட்டுள்ளார்.