Home Featured உலகம் கனடாவில் இனி ஜனவரி, தமிழ் மரபு மாதம்! நாடாளுமன்றம் அங்கீகரித்தது!

கனடாவில் இனி ஜனவரி, தமிழ் மரபு மாதம்! நாடாளுமன்றம் அங்கீகரித்தது!

988
0
SHARE
Ad

gary-anandasangaree-canada

ஒட்டாவா – கனடாவின் நாடாளுமன்றத்தால் அக்டோபர் 5-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மசோதாவின் படி இனி, ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாகக் (Tamil Heritage month) கொண்டாடப்படும்.

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி (படம்) முன்மொழிந்த இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இனி ஜனவரி மாதம் முழுவதும் கனடா முழுக்க தமிழ் மரபு மாதமாகக் கொண்டாடப்படும்.

#TamilSchoolmychoice

இந்த மசோதா, தனிநபர் மசோதாவாக எம்-24 (M-24) என்ற பெயருடன் முன்மொழியப்பட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஒரு வரலாற்று பூர்வ நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.

சில நூறாண்டுகளாக சில நாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களின் மொழி, இன, கலாச்சார உரிமைகளுக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் 1983-ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டு வந்திருக்கும் கனடா நாட்டில், அதிக அளவில் இந்தியத் தமிழர்களும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தமிழர்களும் பெருமளவில் குடியேறியிருக்கின்றனர்.

கனடாவின் மிகப் பெரிய நகரான டொரண்டோவில் மட்டும் ஏறத்தாழ 4 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடா நாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அங்கீகரித்து மரியாதை அளிக்கும் வகையில்தான் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக இனி கடைப்பிடிக்கப்படும்.

அது மட்டுமின்றி தமிழ் மொழியின் பாரம்பரியம், தொன்மை, செழுமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வண்ணமும் கனடாவின் நாடாளுமன்றம் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.