சென்னை – இன்று யாரும் எதிர்பாராத வண்ணம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, புதுடில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேராக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்றார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் சிகிச்சை அறைக்கு வந்த ராகுல் காந்தி அங்கு சுமார் 40 நிமிடங்கள் இருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த விளக்கங்களை அளித்தனர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “தமிழக முதல்வரின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர் விரைவில் முழு நலம் பெற்று பணிக்குத் திரும்புவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து நேரடியாக வருகை தந்து அறிந்து கொள்வதற்காகவே சென்னை வந்ததாகவும் ராகுல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ராகுல் திடீர் வருகை மேற்கொண்டதாலும், யாருக்கும் தெரிவிக்காததாலும், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவருடன் வரவில்லை. பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவருடன் இணைந்து கொண்டார்.
தகவல் தெரிவிக்கப்பட்டதும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து ராகுலைச் சந்தித்து விளக்கம் அளித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.