புதுடெல்லி – தேவையான போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை வாங்க ரஷியாவுடன் 18 ஒப்பந்தங்களைப் போடத் தயாராகி வருகின்றது இந்தியா.
கோவாவில் நாளை அக்டோபர் 15, 16-ம் தேதி நடைபெறவுள்ள 8-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷியப் பிரதமர் புதினும், இராணுவம், அணுசக்தி உள்ளிட்ட 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளனர்.
இராணுவ ஒப்பந்தத்தில் போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை வாங்கவும், இந்தியாவில் தயாரிக்கவும் நிறைய ஒப்பந்தங்கள் போடப்படவுள்ளன.
குறிப்பாக, ரூ.39,000 கோடி மதிப்பிலான 5வது தலைமுறை ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணை, போர் கருவிகள், 400 கி.மீ.,வரை செல்லும் திறன் கொண்ட டிரோன்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்துஸ்தான் ஏரோநெட்டிக்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்டெக் ஸ்டேட் கார்ப்பரேஷன் நிறுவனங்களிடையே இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 1 பில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் இந்தியா – ரஷியா இணைந்து புதிய ரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.