சென்னை – அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரான ஹெச்.வி.ஹண்டே இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.
முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,”புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, புரட்சித் தலைவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.”
“தற்போது அம்மாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள, மருத்துவர் என்ற முறையில் இங்கு வந்தேன். அவருடைய உடல்நிலை நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இப்போது சிங்கப்பூரில் இருந்து இரண்டு பெண் பிசியோ தெரபிஸ்டுகள் வந்துள்ளார்கள். அவர்கள் அம்மா அவர்களுக்கு, பேசிவ் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்கள். அது நல்ல வகையிலே பயன் தந்துள்ளது. அம்மா விரைவிலேயே வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்” என்று ஹெச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.