Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: “அந்தப் பெண்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” – டிரம்ப் (தொகுப்பு...

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: “அந்தப் பெண்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” – டிரம்ப் (தொகுப்பு 2)

792
0
SHARE
Ad

us-presidential-debate-trump-hilary

லாஸ் வெகாஸ் – இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான மூன்றாவது நேரடி விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளில் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், கருச்சிதைவு, கள்ளக் குடியேற்றம் போன்ற விவகாரங்கள் முதல் கட்டமாக விவாதிக்கப்பட்டன.

இன்றைய 3-வது விவாதத்தை ஃபோக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைச் சேர்ந்த கிரிஸ் வால்லஸ் நடுவராக இருந்து சிறப்பாக வழி நடத்தினார்.

#TamilSchoolmychoice

பொருளாதாரம்

Trumpபொருளாதாரம் குறித்த கேள்விகளின் போது, டிரம்ப் சீனாவுடன் வணிகம் செய்தவர் என்று கூறிய ஹிலாரி அதன் காரணமாக பல சீன உயர் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார் என்றும் ஹிலாரி சுட்டிக் காட்டினார். லாஸ் வெகாசிலுள்ள டிரம்பின் கேளிக்கை விடுதி, சீன முதலீட்டில் கட்டப்பட்டது என்றும், ஆனால், சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்கா நடந்து கொள்கின்றது என்று அவர் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார் என்றும் ஹிலாரி குற்றம் சாட்டினார்.

ஒபாபா, ஹிலாரி அதிகாரத்தில் நாடு பல மடங்கு கோடி கடன் பாக்கியைப் பெற்று தத்தளிக்கின்றது என்ற, டிரம்ப்ப், ஹிலாரி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அந்த அமைச்சிலிருந்து 6 பில்லியன் டாலர் காணாமல் போனது என்றும் குற்றம் சாட்டினார். ஆனால் ஹிலாரி அதனை மறுத்தார். ஏற்கனவே, இது உண்மையல்ல என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் ஹிலாரி கூறினார்.

30 ஆண்டுகால அரசியல் பணி அனுபவம் தனக்கு உள்ளது என்று ஹிலாரி பெருமையுடன் கூற, “உங்களுக்கு உள்ளதெல்லாம், மோசமான அனுபவங்கள்தான். நீங்கள் உருவாக்கிய வெளிநாட்டுக் கொள்கைகளால் இன்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் 32 நாடுகளில் பரவியுள்ளது. யாரையும் உங்களால் ஒழிக்க முடியாது” என்று டிரம்ப் ஹிலாரியைச் சாடினார்.

hilary-clintonமாறாக, ஒரு மில்லியன் டாலர் கடனில் தான் உருவாக்கிய வணிக நிறுவனங்கள் இன்று பல பில்லியன் டாலர் மதிப்பில், உலகின் மிகச் சிறந்த சொத்துக்களைக்  கொண்டு திகழ்கின்றன என்றும் அதே பாணியில் அமெரிக்காவையும் நடத்தினால், நாடு எவ்வளவோ முன்னேறும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டுகள்

அதிபராக தகுதி உள்ளவர் யார் என்ற பிரச்சனை தொடர்பில், டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடுவர் கேள்வி எழுப்பியபோது, “பெண்களுக்கு என்னை விட மரியாதை தருபவர் யாருமில்லை” என டிரம்ப் திரும்பத் திரும்ப, இரண்டு முறை கூறினார். அதற்கு பதிலடியாக, நடுவராகப் பணியாற்றிய கிரிஸ் வால்லஸ் “நாங்கள் எல்லோரும்தான் மரியாதை தருகின்றோம்” என்று இடைமறித்தார்.

“9 பெண்கள் இதுவரை உங்கள்  மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருக்கின்றனர்” இதற்கு உங்கள்  பதில் என்ன?” எனக் கேட்கப்பட்டதற்கு, “இவையெல்லாம் பொய்க் கதைகள். அந்தப் பெண்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. இவையெல்லாம் ஹிலாரியின் பிரச்சாரக் குழு செய்த ஏற்பாடுகள்” என்று பதில் கூறினார்.

ஹிலாரியின் பிரச்சாரக் குழுவினர் தனது கூட்டங்களில் கலவரங்களை ஏற்படுத்த பணம் கொடுத்து ஏற்பாடு செய்தனர் என்றும் டிரம்ப் குற்றம் சுமத்தினார்.

பல தருணங்களில் பெண்களைத் தரக் குறைவாகப் பேசியும், ஒரு பெண் நிருபரைத் தாக்கவும் முற்பட்ட, டிரம்ப் யாரென்று மக்கள் இப்போது தெரிந்து கொண்டுள்ளார்கள் என்று ஹிலாரி சாட, ஆயிரக்கணக்கான இணைய அஞ்சல்களை அழித்ததற்காக, ஹிலாரியைப் போட்டிப் போடவே அனுமதித்திருக்கக்கூடாது என்று டிரம்ப் பதிலடி கொடுத்தார்.

ஊடகங்கள்  ஊழல் மலிந்தவை என்றும்  தனக்கு எதிராக அவை நடந்து கொள்வதாகவும் டிரம்ப் கூறினார்.

ஈராக்கின் மோசுல் நகரிலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் டிரம்பும், ஹிலாரியும் கடுமையாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர்.

-தொகுப்பு – இரா.முத்தரசன்