சென்னை – ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு என திமுக தலைவர் மு.கருணாநிதி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல வாரப்பத்திரிகையான விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி, “ஸ்டாலின் இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி ஓடி ஆடிப் பாடுபட்டு பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளிலிருந்து பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்பட்டு அவரே தானாக உழைத்து உழைத்து திமுக-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத் தானே படிப்படியாக உயர்த்திக் கொண்டவர். அந்த வகையில் அவர் தான் என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கின்றார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக-வில் மு.க.அழகிரி இல்லாததை இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி, “இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்திற்குத் தடையாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.