Home Featured உலகம் “தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்” – மனம் மாறிய டிரம்ப்

“தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்” – மனம் மாறிய டிரம்ப்

612
0
SHARE
Ad

donald-trump-townhall-meeting

வாஷிங்டன் – ஹிலாரி கிளிண்டனுடன் புதன்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) மூன்றாவது விவாதத்தில் ஈடுபட்டபோது, கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பது குறித்து இப்போது நான் சிந்திக்கவில்லை – அதற்கான உரிய நேரம் வரும்போது அறிவிப்பேன் – என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என டிரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றார்.

#TamilSchoolmychoice

மூன்றாவது விவாதத்தின்போது, நடுவராகப் பணியாற்றிய ஃபோக்ஸ் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் கிரிஸ் வால்லஸ் “அமெரிக்காவின் அசைக்க முடியாத ஜனநாயக மரபுகளில் ஒன்றாக பின்பற்றப்பட்டு வருவது, அமைதியான, முறையான அதிகாரப் பரிமாற்றமாகும். எவ்வளவோ, கடுமையாக அதிபர் வேட்பாளர்கள் மோதிக் கொண்டாலும், முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தோற்றவர் முடிவுகளை ஏற்றுக் கொள்வதுதான் மரபாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் நீங்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்வீர்களா?” என டிரம்பைப் பார்த்துக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்தபோதுதான், “இப்போது அதைப்பற்றி கூற முடியாது. உரிய நேரம் வரும்போது சிந்திப்பேன்” என டிரம்ப் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஜனநாயக மரபுகளையும், நியாயமான தேர்தல் நடைமுறைகளையும் பற்றி டிரம்ப் கேள்வி எழுப்புகின்றார் என்ற கண்டனங்கள் பரவலாக அமெரிக்க ஊடகங்களில் எழுந்தன.

“நான் வென்றால் தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்வேன். தெளிவான தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று விவாதத்துக்குப் பின்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்களிடத்தில் டிரம்ப் உறுதி கூறியுள்ளார்.