சென்னை – தீபாவளியை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள், கார்த்தியின் காஷ்மோரா மற்றும் தனுஷின் கொடி.
இரண்டு படங்களும் வெவ்வேறு கோணங்களில் தமிழ் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்ற கோகுல் கைவண்ணத்தில், கார்த்தியின் மிரட்டல் தோற்றத்தோடு விளம்பரப்படுத்தப்படும் படம் காஷ்மோரா. இந்து வேதங்களில் ஒரு பகுதியாக அதர்வண வேதம் என அழைக்கப்படும் – ஆங்கிலத்தில் பிளேக் மாஜிக் என வர்ணிக்கப்படும் – மாய மந்திர அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது.
அரசியல் நெடியோடு, தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் கூட்டுத் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவரும் படம் கொடி. எதிர் நீச்சல், காக்கிச் சட்டை என வரிசையாக இரண்டு சிவகார்த்திகேயன் படங்களை எடுத்து வெற்றிக் “கொடி” நாட்டிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதாலும், வெற்றிமாறன்-தனுஷ் தயாரிப்புத் துறையில் இணையும் படம் என்பதாலும், இயல்பாகவே, படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு படங்களின் திரை விமர்சனங்களும், செல்லியலில் இன்று வெள்ளிக்கிழமையே வெளியாகும்.